அலாஸ்கா உச்சி மாநாடு – டிரம்ப் புடின் சந்திப்பு
2025 ஆகஸ்ட் 15 அன்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், உச்சி மாநாட்டின் போது ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பு சர்வதேச அரசியலின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்தது. ஆனால், அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் “அந்த இடத்திற்கு வந்தது புடின் அல்ல; அவரைப் போன்ற தோற்றமுடைய வேறு ஒருவரே” என்ற செய்தி பரவத் தொடங்கியிருக்கிறது.
அனல் பறக்கும் அடுக்கடுக்கான ஆதாரங்கள்?
எதை அடிப்படையாகக் கொண்டு இந்த சந்தேகங்கள் உருவாயின என்பது கவனிக்கத்தக்க ஒன்று. கடந்த இருபது ஆண்டுகளில் புடின் முக அமைப்பில் சில மாற்றங்கள் காணப்பட்டன. கண்ணின் வடிவம், முகத்தின் தோல் நிலை, சிரிப்பின் மாற்றம், உடல் எடை ஆகியவை வேறுபட்டுள்ளதாகப் பல புகைப்படங்களை ஒப்பிட்டு சிலர் சுட்டிக்காட்டினர். இவை வயதின் இயல்பான தாக்கங்களாகவோ அல்லது மருத்துவ சிகிச்சை காரணங்களாகவோ இருக்கலாம் என விளக்கமளிக்கப்படுகின்றன. ஆனால் இந்த தகவலை பரப்புபவர்கள் இதையே “இவர் உண்மையான புடின் அல்ல” என்ற திரிக்கப்பட்ட கருத்துக்களுக்கு ஆதாரமாக்குகின்றனர்.
சந்தேகம் வலுத்த காரணம்
ரஷ்ய அரசியலில், புடினுக்கு அவரது பாதுகாப்புக்காக நகல் உருவங்கள் வைத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் முன்பே எழுந்தது. மேலும் அலாஸ்கா மாநாட்டின் வெளிப்படைத்தன்மை குறைவு என்று கூறப்படுவதோடு சந்திப்பு மிகவும் பாதுகாப்பாக நடந்தது என்பதும் நெருடலாக இருப்பதாக கூறப்படுகிறது. செய்தியாளர்கள் கேள்வி கேட்க அனுமதிக்கப்படவில்லை; பத்திரிகைக் கூட்டம் குறுகியதாகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது. இத்தகைய சூழ்நிலை “ஏதோ மறைக்கப்படுகிறதே” என்ற சந்தேகத்தை சமூக ஊடகங்களில் தூண்டியது.
என்ன தான் உண்மை?
சில YouTube மற்றும் Telegram சேனல்கள், புடின் அலாஸ்காவில் எடுத்த படங்களைப் பழைய படங்களுடன் ஒப்பிட்டு “காதின் வடிவம் மாறி விட்டது”, “குரலின் சாயல் வேறு” என்று கொளுத்தி போடுகின்றன. இருப்பினும் அசோசியேட்டட் பிரஸ், தி கார்டியன், ஃபைனான்ஷியல் டைம்ஸ் போன்ற முன்னணி செய்தி நிறுவனங்கள் அலாஸ்கா சந்திப்பில் புடின் பங்கேற்றார் என உறுதியாகத் தெரிவித்துள்ளன.