Monday, January 19, 2026

‘கோல்டு லோன்’ வாங்க இனிமேல் இது கட்டாயம்! அமலுக்கு வரும் புதிய விதிகள்!

இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதுமே ஒரு தனி மவுசு இருக்கு. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரிச்சாலும், அதை வாங்குகிறவர்களின் எண்ணிக்கையில் எந்த குறையும் கிடையாது. ஏனெனில், நடுத்தர மக்கள் தங்களுக்கு அவசர நிதி தேவைப்பட்டால், நம்பிக்கையுடன் திரும்பி பார்க்கும் முதலாவது சொத்து தங்க நகைகள்தான்.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதனால்தான் தங்க நகை கடத்தல், இறக்குமதி ஆகியவையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. பலர் தங்க நகையை வாங்குவதற்குப் பின்னணி, அதை அடகு வைத்து பணம் பெற முடியும் என்பதே முக்கிய காரணம்.இந்நிலையில், தங்க நகை கடனில் சில புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. முழு பணம் கட்டி தான் நகையை மீட்டெடுக்க வேண்டும், 75% மட்டுமே கடனாக வழங்கப்படும், நகை ரசீது கட்டாயம் வேண்டும் என்பன போன்றவை. இதற்கு பல தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து மத்திய அரசு தலையிட்டு, 2 லட்சம் ரூபாய் வரை நகை கடனுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்க வேண்டாம் என்றும், புதிய விதிகள் அடுத்த ஆண்டிலிருந்து மட்டுமே அமலாக வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கிக்கு அறிவுரை வழங்கியது.

இதன் அடிப்படையில், தற்போது ரூ.2.5 லட்சம் வரை நகை கடன் பெறும் நபர்களுக்கு 85% வரை கடன் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதற்கு மேற்பட்ட கடன்களுக்கு 80% மட்டுமே வழங்கப்படும். மேலும் ஒரே நபர் அடிக்கடி நகைகளை அடகு வைக்கும் நிலை இருக்குமானால், அவர் மீதான நம்பகத்தன்மை மற்றும் கிரெடிட் மதிப்பீடு பரிசீலிக்கப்படுவது கட்டாயமாக்கபட்டுள்ளது…

மேலும் நகைகள் ஏலத்தில் விடப்படும் நிலையில், அவை குறைந்தபட்சம் 90% மதிப்பில் விற்கப்பட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் பொதுமக்கள் நலன் கருதி செய்யப்பட்ட மாற்றங்களாகும். தங்கம் ஒரு முதலீடு மட்டுமல்ல, நெருக்கடியிலே நம்பிக்கையான தோழனாக இருப்பதால்தான் அதன் மதிப்பு என்றும் குறையாமல் இருக்கிறது.

Related News

Latest News