சம்பளம் வந்தவுடனே நம்மில் பலர் நம்மை நாமே ராஜாவாக நினைத்து வாழ ஆரம்பிக்கிறோம். “இது நம்ம சம்பளம்… நாமே செலவழிக்கறோம்” என்ற மனநிலையுடன் கையில் இருக்கின்ற பணத்தை தேவையின்றி வீணடிக்கிறோம். ஆனால் மாதம் கடைசி வாரம் வரும்போது, “சம்பள தினம் வர இன்னும் எத்தனை நாள் இருக்கிறது? என்று கணக்குப் போட ஆரம்பிக்கிறோம். இதற்கு காரணம் போதாத சம்பளமோ, வருமானம் குறைவோ இல்லை.பணத்தை நிர்வகிக்கும் நமது பழக்கங்களிலேயே உள்ள தவறுகளின் விளைவுதான் இது.
இந்த விளைவுகளை சரி செய்ய நீங்கள் ஒரு 7 விஷயங்களை மட்டும் கண்காணித்து அதை சரி செய்தாலே போதும்.
முதலில், பிறர் பார்வைக்காக செய்யும் ஆடம்பரச் செலவுகள். நமக்கு தேவையோ இல்லையோ என்றுத் தெரியாமல் நம்மை பெரியவர்களாக காட்ட expensive phone, car, bike மாதிரி பொருட்களை வாங்குகிறோம். இது நமது நிதிநிலைக்கு பெரும் பிம்பமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. நண்பர்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் உருவாகும் சமூக அழுத்தத்திற்கு ஆட்பட்டு நம்மை பெரியவர்களாக காட்டும் முயற்சி நம்மை அதிக செலவிற்கு இட்டுச் செல்கிறது. உண்மையில் அந்த பொருள் நமக்கு தேவைப்பட்டதா என்பது ஒரு மிக முக்கியமான கேள்வி.
பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான தெளிவும் பழக்கமும் இல்லாமல்தான் நாம் இப்படி செயல்படுகிறோம். பெரும்பாலான நேரங்களில், பிறர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் அது நம் பண நிலைக்கு பொருத்தமா இல்லையா என்பதைப் பற்றி யோசிக்கவே மாட்டோம்.
அதேபோல , தள்ளுபடி என்ற பெயரில் செய்யும் தேவையற்ற செலவுகள். “இப்போதே வாங்குங்கள்”, “இப்படி ஒரு சலுகை மீண்டும் கிடைக்காது” என்ற வார்த்தைகள் நம்மை ஈர்த்து நம்மிடம் தேவையற்ற பொருட்களை வாங்க வைக்கின்றன. நாம் ரூ.1000 செலவழித்திருப்போம் ஆனால் அதை சேமித்தது போல தோன்றும். இது ஒரு மாயைதான். தேவையான பொருளுக்கு மட்டுமே தள்ளுபடியில் வாங்குவது புத்திசாலித்தனம். இல்லையென்றால் அது நம் பர்ஸை காலி செய்து விடும்.
அடுத்து, மனதை இழுக்கும் Monthly EMI. ஒரே மாதத்தில் வாங்க முடியாத பொருட்கள் அனைத்தையும் தவணைக்கு வாங்கிக்கொள்கிறோம். ஒரு அளவுக்கு அது சரி, ஆனா தேவையில்லாத ஆசைகளுக்காக கடனில் மூழ்கிக் கொள்வதுதான் மிகப்பெரிய அபாயம். ஒரே நேரத்தில் பல கடன்கள் இருந்தால், அந்த month-end திண்டாட்டம் தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.
இன்னொரு பெரிய சிக்கல் என்ன தெரியுமா? நம் செலவுகள் கணக்கில் வராமலே போகிறது. இன்று எல்லோரும் QR code, UPI மூலம் பணம் செலவழிக்கிறார்கள்.இதன் மூலம், கையில் ரொக்கப் பணம் இல்லாமல் போய்விடுகிறது.இதனால் சின்னச் சின்ன செலவுகள் கூட கணக்கில் வராமல் தப்பித்து போகிறது. ஒரு சின்ன காபி, ஒரு ஸ்னாக்ஸ், ஒரு ride share – இதெல்லாம் சேர்ந்து ஒரு பெரிய தொகையா மாறும்.
சில நேரங்களில் மனநிலை அடிப்படையில் செய்யப்படும் செலவுகள். மனசு கஷ்டப்பட்டால் ஷாப்பிங், சந்தோஷமானால் பார்ட்டி உணர்ச்சியின் அடிப்படையில் செலவுகள் செய்யும் பழக்கம் நம்மை நிதி ரீதியாக பாதிக்கிறது. உணர்ச்சிகளை பணத்தால் சமாளிக்க முடியாது. செலவுக்கு முன் யோசிக்கவும், ஒரு நாள் காத்திருக்கவும் பழக வேண்டும்.
அதிலிருந்தும் முக்கியமானது, பட்ஜெட் போடாமலே செலவழிப்பது. எவ்வளவு பணம் வந்தது, எவ்வளவு செலவாகிறது என்ற அடிப்படை திட்டமிடல் இல்லாதது நிதி ஒழுங்கு இல்லாமையின் முக்கியக் காரணம். ஒரு சரியான பட்ஜெட் நமக்கு செலவுகளை கண்காணிக்கவும், சேமிக்கவும் உதவும். இது நம் பணத்தை கட்டுப்படுத்தும் முறை அல்ல, நம் பணத்திற்கு திசை காண்பிக்கும் வழிகாட்டி.
நாம் சந்திக்கின்ற இன்னொரு பிழை, உடனடி திருப்திக்காக செய்யும் செலவுகள். “இதை இப்போவே வாங்கணும்” என்பதற்காக நம் பணத்தை இழப்பது ஒரு தவறு. நண்பர் வாங்கியதைக் காணும்போது நாமும் வாங்கவேண்டும் என்ற உணர்வு நமக்குள்ளாக உருவாகிறது. ஆனால் அந்த பொருள் நமக்குத் தேவையா? அல்லது வெறும் ஆசையா? என்பது தெரியாமல் செலவழிக்கிறோம். ஒரு சில நாட்கள் காத்திருந்து யோசிக்க பழகினால், பல தவறான முடிவுகளை தவிர்க்க முடியும்.
கடைசி தவறு, வருமானம் அதிகமாகும்போது செலவையும் அதிகமாக்குவது. சம்பளம் உயர்ந்தவுடன் வாழ்க்கை முறையையும் மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஊட்டப்படுகிறது. ஆனால் சேமிப்பு அதே இடத்தில் தான் இருக்கும். இதற்கான தீர்வு, சம்பளம் வந்த உடனே ஒரு பகுதியை வெவ்வேறு சேமிப்பு முறைகளில் மாற்றிவிடுவது. மீதமுள்ள பணத்திலேயே வாழ்க்கையை நிர்வகிக்க பழக வேண்டும்.
இவை எல்லாம் பெரிய விஞ்ஞானம் கிடையாது. சின்ன சின்ன பழக்கங்களை மாற்றினாலே போதும். பணம் நம்மிடம் தங்கும். மாத கடைசியில் மன அழுத்தமில்லாத வாழ்க்கை கிடைக்கும். இன்று அந்த ஒரு மாற்றத்தை செய்யத் துவங்குங்கல். நாளை அது உங்களுடைய வெற்றிப் பாதையை துவக்கக் கூடிய ஒரு பெரிய அடியெடுத்து வைக்கும்.