தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதலே கொளுத்தும் வெயிலிலும் வாக்காளர்கள் உற்சாகமாக வந்து தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். இந்த தேர்தலில் மொத்தமாக 84.69 சதவீதம், அதாவது சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அதிக வாக்குப்பதிவுக்கு காரணம் என்ன என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது.
குறிப்பாக, சிறப்புத் தீவிர திருத்தமான SIR காரணமா அல்லது இந்த முறை அதிக கட்சிகள் போட்டியிட்டதால் மக்களின் ஆர்வம் உயர்ந்ததா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் இடம் மாறியவர்கள், இறந்தவர்கள் உள்ளிட்ட பெயர்களை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது. இதன் மூலம் சுமார் 50 லட்சம் பெயர்கள் அகற்றப்பட்டன.
இதனால் வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்ததாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
கடந்த 11 தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 78.29 சதவீதம் வாக்குகள் பதிவானதே அதிகபட்சமாக இருந்தது.
தற்போது 2026 தேர்தலில் அது 85 சதவீதமாக உயர்ந்து, பழைய சாதனையை முறியடித்துள்ளது.
இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தமிழக வெற்றி கழகம் ஆகியவை முக்கிய போட்டியாளர்களாக இருந்தன.
நான்கு முனைப் போட்டி நிலவியதால், குறிப்பாக இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்ததாக கூறப்படுகிறது.
18 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் ஓட்டுகள் புதிய கட்சிகளுக்கு சென்றிருக்கலாம் என்றும், 30 வயதுக்கு மேற்பட்டோரின் வாக்குகள் திமுக, அதிமுகவுக்கு சாதகமாக இருந்திருக்கலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இருந்தாலும், SIR-க்கு பிறகு இந்த வாக்குப்பதிவு குறைவே என்றும் அரசியல் வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.
