தமிழ்நாடு அரசு தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஐ மகளிர் உரிமைத்தொகையாக வழங்கி வருகிறது. பெண்களின் உழைப்பை மதித்து அவர்களுக்கு பொருளாதார உதவி புரிய வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம், ஆண்டுக்கு ரூ.12,000 வரை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் லட்சக்கணக்கான பெண்கள் இந்தத் திட்டத்துக்காக விண்ணப்பம் செய்துள்ளனர். எனினும், அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. தகுதி வாய்ந்தவர்களுக்கே இந்த நன்மை வழங்கப்படும் என்பதால், விண்ணப்பித்தவர்கள் முதலில் தங்களுக்கு அந்தத் தகுதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
அரசு அறிவித்துள்ள விதிகளின்படி, குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும். அதேபோல், ஐந்து ஏக்கருக்கு குறைவான நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவான புன்செய் நிலம் வைத்திருப்பவர்களே தகுதி பெறுவர். ஆண்டுக்கு வீட்டு பயன்பாட்டிற்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களை சேர்ந்த தலைவிகளும் இதில் சேரலாம்.
மாறாக, வருமானவரி செலுத்துபவர்கள், அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், நான்கு சக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள் மற்றும் ஏற்கனவே சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த நன்மையை பெற முடியாது.
அதிகாரிகள் கூறுவதாவது, ‘விண்ணப்பம் செய்துவிட்டால் உரிமைத்தொகை கிடைக்கும் என்று எண்ண வேண்டாம். அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப தகுதி இருந்தால்தான் ஆயிரம் ரூபாய் பெண்களின் கைக்கு வரும், என தெளிவுபடுத்தியுள்ளனர்.