பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஏவுகணைகள் வழங்கப் போவதாக பரவியிருந்த ஊகச் செய்திகள் குறித்து, அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கு ராணுவ உதிரி பாகங்களை விற்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு AIM-120 போன்ற சக்தி வாய்ந்த ஏவுகணைகள் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியானது.
ஆனால், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் இதைத் தெளிவுபடுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எந்த வகையான ஆயுதங்களும் வழங்கப்படவில்லை என்றும், கையெழுத்தானது உதிரி பாக விற்பனைக்கான ஒப்பந்தம்தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 41.6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில், உதிரி பாகங்களைப் பெறும் நாடுகளில் பாகிஸ்தானின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதன் காரணமாக, வாஷிங்டன் அரசு பாகிஸ்தானுக்கு மீண்டும் அதிநவீன ஆயுதங்களை வழங்கத் தொடங்கியுள்ளது என்ற தவறான புரிதல் உருவானது.
இந்தியா மற்றும் சர்வதேச ஊடகங்களில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, அமெரிக்க தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானை மட்டுமல்லாது பிரிட்டன், போலந்து, ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரேலியா, கத்தார், தென் கொரியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளுடனும் தொடர்புடையது என விளக்கம் அளித்தது. இதனால், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஏவுகணைகள் வழங்குகிறது என்ற செய்தி ஆதாரமற்றது என்பது உறுதியாகியுள்ளது.
