உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் காலையா மாலையா? தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..!

உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் காலையா அல்லது மாலையா என்பது பல ஆண்டுகளாக விவாதமாக இருந்து வருகிறது. இந்த கேள்விக்கு சமீபத்திய ஒரு ஆய்வு சில முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளது.

இந்த ஆய்வில் 14,489 பேரின் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. உடற்பயிற்சி செய்யும் நேரம் மற்றும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், ஹைப்பர்லிபிடீமியா (அதிக LDL கொலஸ்ட்ரால் அல்லது ட்ரைகிளிசரைடுகள்) போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு இடையிலான தொடர்புகள் ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வில் பங்கேற்ற ஆய்வாளர்களில் ஒருவரான பிரேம் படேல் கூறுகையில், “உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதை விட எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்வது நல்லதே. ஆனால், உடற்பயிற்சி செய்யும் நேரத்திற்கும் அதன் நன்மைகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை அறியவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்தார்.

ஆய்வின் முடிவில், காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இதய சம்பந்தமான பிரச்சினைகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்தது. குறிப்பாக, காலை உடற்பயிற்சி இதய நலனை மேம்படுத்துகிறது என கூறப்பட்டுள்ளது.

மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்பவர்களுடன் ஒப்பிடுகையில், காலை 7 முதல் 8 மணிக்குள் உடற்பயிற்சி செய்தவர்களுக்கு:

கரோனரி தமனி நோய் ஏற்படும் அபாயம் 31% குறைவாக இருந்தது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு 18% குறைந்தது. ஹைப்பர்லிபிடீமியா அபாயம் 21% குறைந்தது. டைப் 2 நீரிழிவு நோய் அபாயம் 30% குறைந்தது. உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு 35% குறைந்தது.

மேலும், சில முன்பைய ஆய்வுகள் காட்டியதாவது, காலை உணவுக்கு முன் உடற்பயிற்சி (குறிப்பாக ஓட்டம்) செய்தால் உடலில் உள்ள கொழுப்பு அதிகமாக எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த விளைவு பயிற்சிக்கு பிறகும் சில மணி நேரங்கள் நீடிக்கிறது.

ஆனால் அதே பயிற்சியை மாலை நேரத்தில் செய்யும் போது, உடல் கொழுப்பை விட கார்போஹைட்ரேட்டை அதிகமாக எரிபொருளாக பயன்படுத்துகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தத்தில், எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்வது நல்லதே என்றாலும், காலை நேர உடற்பயிற்சி கூடுதல் ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

Related News

Latest News