நூறாண்டுகளை கடந்தும் வாசம் வீசும் மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பர தூதராக, நடிகை தமன்னாவை கர்நாடக அரசு 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக அவருக்கு ரூபாய் 6 கோடியே 20 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தி நடிகையான தமன்னாவை, கர்நாடக அரசு விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்ததற்கு, கர்நாடக மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அனுஷ்கா ஷெட்டி, ராஷ்மிகா மந்தனா, ரச்சிதா ராம், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆஷிகா ரங்கநாத், அதிதி பிரபுதேவா, ஸ்ரீநிதி ஷெட்டி, நிதி சுப்பையா, தன்யா ராம்குமார் என்று ஏராளமான நடிகைகள் நம்மிடம் உள்ளனர்.
அப்படியிருக்க தமன்னாவை விளம்பர தூதராக நியமித்தது ஏன்? என்று, மக்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டில், ” இந்திய அளவில் பிரபலமான ஒரு முகம் தேவைப்பட்டதால் தமன்னாவைத் தேர்வு செய்தோம்.
மார்க்கெட்டிங் நிபுணர்களுடன் கலந்துரையாடிய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2028-ம் ஆண்டுக்குள் மைசூர் சாண்டல் நிறுவனத்தின் வருவாயை ரூபாய் 5000 கோடியாக அதிகரிப்பதே இதன் நோக்கம்,” என்று விளக்கம் அளித்துள்ளார்.
என்றாலும் கன்னட மக்கள், அமைச்சரின் இந்த விளக்கத்தால் சமாதானம் அடைந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் தங்களது எதிர்ப்பினை தொடர்ச்சியாக, சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.