தினமும் வெறும் ரூ.333 சேமிப்பதன் மூலம் ரூ.17 லட்சத்திற்கும் அதிகமான தொகையை உருவாக்க முடியும் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் தகவலாக உள்ளது. இந்த வாய்ப்பை தபால் அலுவலகத்தின் தொடர் வைப்புத்தொகை திட்டமான Recurring Deposit வழங்குகிறது. பாதுகாப்பான முதலீடு, சிறிய சேமிப்பு மற்றும் உறுதியான வருமானம் என்பதால், இந்தத் திட்டம் சாமானிய மக்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறது.
தபால் அலுவலக RD என்பது மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் சேமிப்புத் திட்டமாகும். இதனால் முதலீட்டாளர்களின் பணத்திற்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஒரு நிரந்தர தொகையை கணக்கில் செலுத்த வேண்டும். அதற்கான வட்டியும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் நிலையான வட்டி விகிதத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
சந்தை ஏற்ற இறக்கங்களின் தாக்கம் இல்லாததால், ஆபத்து இல்லாத முதலீடாக இது கருதப்படுகிறது.
தினமும் ரூ.333 சேமித்தால், மாதத்திற்கு சுமார் ரூ.10,000 முதலீடு செய்ய முடியும். இந்த முறையில் ஐந்து ஆண்டுகளில் மொத்த வைப்புத்தொகை ரூ.6 லட்சமாகும். வட்டியுடன் சேர்த்து, அந்தத் தொகை ரூ.7 லட்சத்து 13 ஆயிரத்து 659 ஆக உயரும்.
இதே சேமிப்பை 10 ஆண்டுகள் தொடர்ந்தால், வைப்புத்தொகை ரூ.12 லட்சமாகவும், வட்டியுடன் சேர்த்து மொத்த பணம் ரூ.17 லட்சத்து 8 ஆயிரத்து 546 ஆகவும் மாறும். இதில் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான தொகை வட்டியின் மூலமே கிடைக்கிறது.
18 வயது பூர்த்தி செய்தவர்கள் இந்த RD கணக்கைத் தொடங்கலாம். தனிநபர் கணக்காகவோ, கூட்டுக் கணக்காகவோ அல்லது குழந்தைகளின் பெயரிலோ இந்த முதலீட்டை செய்யலாம். மேலும், கணக்கு தொடங்கி ஒரு ஆண்டு கடந்த பின், வைப்புத்தொகையின் 50 சதவீதம் வரை கடனாகப் பெறும் வசதியும் உள்ளது. அவசர தேவைகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.
சிறிய சேமிப்பின் மூலம் பெரிய நிதி உருவாக்க விரும்புபவர்களுக்கு, தபால் அலுவலக RD ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான தேர்வாக இருக்கிறது.
