Friday, December 12, 2025

தவெக-வால் வந்த தடாலடி மாற்றமா? அதிரடி நடவடிக்கைகளில் திமுக

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் கூட்டங்களுக்கு இளைஞர்கள் பட்டாளம் திரண்டு வரும் நிலையில், அதனை சமாளிக்க ஆளும் திமுக தலைமை இளைஞரணிக்குள் புதிய உயிரூட்டும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

முன்னதாக ஒன்றிய, நகர, மாவட்ட மட்டங்களிலேயே இளைஞரணிக்கு பொறுப்பாளர்கள் இருந்த நிலையில், சமீபத்தில் கிராம கிளை வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் இளைஞரணிக்காக ஒரு அமைப்பாளரும் மூன்று துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேரூராட்சிகளில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு அமைப்பாளர், இரண்டு துணை அமைப்பாளர்கள்; நகரங்களில் ஒரு அமைப்பாளர், மூன்று துணை அமைப்பாளர்கள்; மாநகராட்சிகளில் ஒரு வட்டத்துக்கு ஒரு அமைப்பாளர், ஐந்து துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் நோக்கில், சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய நான்கு மண்டலங்களில் விரைவில் இளைஞரணி மாநாடுகள் நடைபெற உள்ளன. இம்மாநாடுகள் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளன.

மாநாடு நடைபெறும் முன், அனைத்து நிர்வாகிகளும் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆக்டிவாக செயல்படாதவர்களையும் வயது வரம்பை மீறியவர்களையும் நீக்கி, துடிப்பான புதிய முகங்களை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, முதல் மாநாடு நடைபெறவுள்ள கோயம்புத்தூர் மண்டலத்தில், தென்மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் நேரில் சென்று பட்டியலை ஆய்வு செய்துள்ளனர். அவர்கள், செயல்பாடின்றி உள்ளவர்களை நீக்கி, ஆர்வமுள்ள இளைஞர்களை சேர்க்க அறிவுறுத்தியுள்ளனர். இதன் மூலம், மாநாடு நடைபெறும் நேரத்துக்குள் திமுகவின் புதிய, துடிப்பான இளைஞர் படை தயாராகும் என தெரிவிக்கப்படுகிறது.

Related News

Latest News