“பேச்சுவார்த்தைக்கு நான் தயார்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பை, ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓமன் நாடு மூலமாக ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவலை, ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி அடியோடு மறுத்துள்ளார். “அமெரிக்காவுடன் இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை” என்று கூறியுள்ள அவர், ட்ரம்ப் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
“அமெரிக்கா ஃபர்ஸ்ட் (America First) என்று கோஷம் போட்ட ட்ரம்ப், இப்போது ‘இஸ்ரேல் ஃபர்ஸ்ட்’ (Israel First) என்று மாறிவிட்டார். இஸ்ரேலின் அதிகாரப் பசிக்காகவும், பேராசைக்காகவும் சொந்த அமெரிக்க ராணுவ வீரர்களையே பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறார்” என்று லாரிஜானி ஆவேசமாகக் கூறியுள்ளார்.
ட்ரம்ப் ஒரு மாயுலகத்தில் வாழ்ந்து கொண்டு இஷ்டத்திற்குப் பேசுவதாகவும், பிராந்தியத்தில் அமைதியைச் சீர்குலைப்பதே அவரது வேலை என்றும் அவர் சாடியுள்ளார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டிருந்த “ஈரான் சமாதானத்திற்குத் தயார்” என்ற செய்தி வெறும் வதந்தி என்று லாரிஜானி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஆனால், இதில் ஒரு மிகப்பெரிய முரண்பாடும் உள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, “ஈரான் எப்போதும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்குத் தயாராகத் தான் இருந்தது. ஆனால், நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அமெரிக்கா எங்கள் மீது முதுகில் குத்துவது போலத் தாக்குதல் நடத்தியது” என்று கூறியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த மென்மையான போக்கிற்கு நேர்மாறாக, கமேனியின் வலதுகரம் என்று அழைக்கப்படும் லாரிஜானி “பேச்சுவார்த்தையே கிடையாது” என்று கறாராகச் சொல்லியிருப்பது ஈரானுக்குள் இருக்கும் குழப்பத்தைக் காட்டுகிறது.
இதற்கிடையில், “ஆபரேஷன் லயன்ஸ் ரோர்” மற்றும் “ஆபரேஷன் எபிக் ஃப்யூரி” என்ற பெயரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானை துவம்சம் செய்து வருகின்றன. கமேனி கொல்லப்பட்ட பிறகு ஈரான் பதிலடித் தாக்குதலில் இறங்கியுள்ளதால், வளைகுடா நாடுகள் ரத்த பூமியாக மாறி வருகின்றன.
ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளன. இந்தியப் பிரதமர் மோடியும் வளைகுடா தலைவர்களிடம் பேசி அமைதி காக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால், ஒருபக்கம் “பேசலாம்” என்கிறார் ட்ரம்ப், மறுபக்கம் “வாய்ப்பே இல்லை” என்கிறார் லாரிஜானி. இந்த ஈகோ மோதலில் அடுத்தது என்ன நடக்கும் என்ற அச்சத்தில் உலகம் உறைந்துள்ளது.
