வரும் 26ம் தேதி தலைநகர் டெல்லியில் நாட்டின் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கொண்டாட்டத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு நடக்கும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று, முதல்முறையாக 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். இதற்காக டெல்லி விமான நிலையம் வந்தடைந்த இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோவை மத்திய அமைச்சர் பபித்ரா மர்ஹெரிட்டா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்தோனேசிய அதிபரின் சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தங்கர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.