Wednesday, January 14, 2026

பாகிஸ்தான் மாணவர்களைக் காப்பாற்றிய இந்தியக் கொடி

ரஷ்யா- உக்ரைன் போரில் இந்தியத் தேசியக் கொடி பாகிஸ்தான்,
துருக்கி நாட்டு மாணவர்களைக் காப்பாற்றியுள்ள தகவல் இணையத்தில்
வைரலாகி வருகிறது.

உக்ரைனில் சிக்கியுள்ள தங்கள் நாட்டினரை மீட்க ஒவ்வொரு நாடும்
பெரும் முயற்சி எடுத்துவருகிறது. இந்தியாவும் ஆபரேஷன் கங்கா என்னும்
பெயரில் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைன் அண்டை நாடுகள் வழியாக
மீட்டுவந்தது.

இந்தியா வருவதற்காக உக்ரைனிலிருந்து ரோமானியாவின் புச்சாபெஸ்ட்
பகுதிக்கு இந்திய மாணவர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக
இந்தியத் தேசியக் கொடியை ஏந்திவந்துள்ளனர்.

அப்போது பாதுகாப்பு கருதி பாகிஸ்தான், துருக்கி நாட்டு மாணவர்களும்
இந்திய மாணவர்களுடன் இந்தியத் தேசியக்கொடியை ஏந்தி வந்துள்ளனர்.
இந்தியர்கள் மனிதாபிமானம் நிறைந்தவர்கள் உள்ளவர் என்பதை நிரூபிக்கும்
விதமாக இந்தச் செயல் அமைந்துள்ளது.

இதுபற்றிக் கூறியுள்ள இந்திய மாணவர் ஒருவர், ”நான் மார்க்கெட்டுக்கு
ஓடிச்சென்று அட்டையும் பெயின்ட்டும் வாங்கிவந்தேன். அட்டையை வெட்டி
அதில் இந்தியத் தேசியக் கொடியை வரைந்து அதன் உதவியுடன் எல்லையைக்
கடந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு மாணவர், ”நாங்கள் உக்ரைனின் ஒடெஸா பகுதியில் இருந்து
பேருந்தில் மால்டோவா எல்லைக்கு வந்தோம். மால்டோவா நாட்டினர்
மிகவும் நல்லவர்கள். நாங்கள் தங்குவதற்கு இடம் தந்ததுடன், இலவச டாக்ஸியும்
கொடுத்து உதவினர், ரோமானியாவில் உள்ள இந்தியத் தூதரகமும் இந்திய
விமானம் வரும்வரை எங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும்
செய்தது. மால்டோவா, இந்தியத் தூதரகங்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் பலர் இந்தியாவை எதிரியாகக் கருதினாலும், இந்தியர்கள்
அவர்களையும் அரவணைத்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உதவியது அனைவரின்
இதயங்களையும் வருடிவிட்டது.

துருக்கி நாட்டு மாணவர்களும் இந்திய மாணவர்களோடு இந்தியக் கொடியை
ஏந்தி பாதுகாப்பாக வந்துள்ளனர்.

இந்தியத் தேசியக் கொடியைப் பிற நாட்டினர் ஏந்தி வருவதில் தங்களுக்கு
ஏதும் ஆட்சேபனை இல்லை என்று இந்திய மாணவர்கள் தெரிவித்து தங்களின்
தயாள குணத்தை நிரூபித்துவிட்டனர்.

Related News

Latest News