Tuesday, December 9, 2025

‘இனி இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்காது! பாக். உடன் இந்தியா போர் செய்யாது!’ பற்றவைக்கிறாரா டிரம்ப்?

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதிய கருத்து ஒன்றை வெளியிட்டிருப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்திய – அமெரிக்க தொழிலதிபர்கள் சந்திப்பில் பேசிய அவர், ‘சமீபத்தில் இந்திய பிரதமருடன் தொலைபேசியில் பேசினேன். பல விஷயங்கள் குறித்து உரையாடினோம், ஆனால் முக்கியமாக வர்த்தகத்தைப் பற்றியே அதிகம் பேசினோம். இந்திய பிரதமர் அதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்,’ என தெரிவித்தார்.

மேலும் அவர், ‘எங்களுக்குள் மிக நல்ல உறவு நிலவுகிறது. இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்காது என அவர் தெரிவித்தார். அதேபோல், ரஷ்யா – உக்ரைன் போர் முடிவடைய வேண்டும் என்ற விருப்பமும் இந்தியாவுக்கு உள்ளது. போர் தொடர்பாகவும் சிறிது நேரம் உரையாடினோம்,’ என்றும் கூறினார்.

அதோடு, ‘வர்த்தக விவாதங்களுடன் இந்தியா – பாகிஸ்தான் உறவுகள் பற்றியும் பேச்சு நடந்தது. இனி இந்த இரு நாடுகளுக்கும் இடையே போர் நிகழாது என்பது மகிழ்ச்சியளிக்கிறது,’ என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

அவரது இந்தக் கருத்து, முந்தைய ‘ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தத்திற்குப் பிறகு வர்த்தகத்தின் மூலம் இந்தியா – பாகிஸ்தான் உறவு மேம்பட்டது’ என்ற கூற்றை மீண்டும் நினைவூட்டுகிறது.

தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புதிய கருத்துக்கு, இந்திய அரசு எந்த வகையில் பதிலளிக்கப்போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.

Related News

Latest News