ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என, NATO தலைவர் மார்க் ருட்டே விடுத்த எச்சரிக்கை உலக அரங்கில் புயலைக் கிளப்பி வருகிறது. இந்தநிலையில் இந்தியா தற்போது மார்க் ருட்டேவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ” இது குறித்த அறிக்கைகளை பார்த்தோம், என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நமது மக்களின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு புரிந்துகொள்ளக் கூடிய வகையில், நாம் முன்னுரிமை அளித்து வருகிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இந்த விஷயத்தில் சந்தையின் நிலைமை மற்றும், மாறிவரும் உலக சூழல்களுக்கு ஏற்ப நாம் முடிவுகளை எடுக்கிறோம். இதில் என்ன இரட்டை நிலைப்பாடுகள் இருந்தாலும், நாங்கள் அதுகுறித்து எச்சரிக்கையாக இருக்கிறோம்,” என்று தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கன்வால் சிபல், ” NATOவின் உறுப்பு நாடுகளான துருக்கி (Turkey), ஹங்கேரி (Hungary), ஸ்லோவாக்கியா (Slovakia) நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கின்றன.
அவர்கள் மீதும் பொருளாதார தடைகள் விதிக்க அழுத்தம் கொடுப்பீர்களா? இல்லை வழக்கம்போல மவுனம் காப்பீர்களா? ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் 7 சதவீதம் கச்சா எண்ணையை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பீர்களா?,” என மார்க் ருட்டேவை விமர்சித்து இருக்கிறார்.