“உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும்…” என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம் அல்லவா? இப்போது அது நம் கண்முன் நடப்பதை பார்க்கிறோம்… பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் தன் தூக்கத்தை தொலைத்துவிட்டது… மட்டுமல்லாமல் அந்நாட்டின் ஒட்டு மொத்த நிம்மதியும் நிலைகுலைந்து போய் இருப்பதையே பாகிஸ்தான் தரப்பின் ஒவ்வொரு நகர்வும் தெளிவாக காட்டுகிறது.
அந்த வகையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் நேற்றிரவு இஸ்லாமாபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அத்தாஉல்லா தரார், அடுத்த 36 மணி நேரத்திற்குள் இந்தியா தங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிருப்பதாக அச்சம் தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “பாகிஸ்தான் மீது அடுத்த 24-லிருந்து 36 மணி நேரத்திற்குள் ராணுவ தாக்குதல் நடத்தப்படலாம் என்று நம்பத்தகுந்த உளவுத்தகவல்கள் தங்களுக்கு கிடைத்திருக்கின்றன எனவும் உறுதியான ஆதாரங்கள் இல்லாத, வெறும் கட்டுக்கதைகளை ஆதாரமாக கொண்டு இந்த தாக்குதலை இந்திய ராணுவம் திட்டமிட்டிருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
மேலும் தரார் “எங்கள் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பை உணர்ந்திருக்கிறோம். எங்கள் மீது எந்த ஒரு தாக்குதல் நடந்தாலும், அதன் பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு முழு பொறுப்பையும் இந்தியாதான் ஏற்க வேண்டும்” என்று மிரட்டல் தோரணையில் கூறியிருக்கிறார்.
இந்த எச்சரிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரிகளை சந்தித்து, “பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. எந்த இடத்தில், என்ன நேரத்தில், எப்படிப்பட்ட தாக்குதலை நடந்த வேண்டும் என்பது உங்கள் விருப்பம். பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும், அவர்களை கண்டுபிடித்து, துரத்தி அழிப்பது நமது கடமை” என்று கூறியிருப்பது “பயங்கரவாதிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும்” என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருப்பதையே காட்டுகிறது.