Wednesday, May 7, 2025

டன் கணக்கில் தங்கத்தை வாங்கிப் போடும் இந்தியா! குவித்து வைக்க காரணம்? அப்போ விலை தரைதட்டுமா?

இந்திய மக்களுக்கும் தங்கத்துக்கும் இடையேயான பிரிக்க முடியாத பந்தம் இன்று நேற்றல்ல… அது எப்போதோ ஆரம்பமானது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் மக்கள் தங்கம் வாங்குவதை கொஞ்சம் Break போட்டு நிறுத்தியுள்ளனர். நிலைமை இப்படி இருக்க RBI என்னவென்றால் தங்கத்தை டன் கணக்கில் வாங்கி குவித்து வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி கையிருப்பில் இருக்கும் தங்கத்தை அதிகரிப்பதில் களத்தில் இறங்கி உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு வலிமையான நாடாக நிலைநிறுத்தியிருக்கிறது. 2024-25 நிதியாண்டில் மட்டும், RBI 57.5 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. மேலும் இது 2017க்கு பிறகு இரண்டாவது முறை அதிகப்படியான தங்க கொள்முதல் என்ற தகவல் “RBI ஏன் இப்படி தங்கத்தை வாங்கி குவிக்கிறது?” என்ற கேள்வியையும் கூடவே எழுப்புகிறது.

சரி… RBI தங்கத்தை அதிகளவில் வாங்குவதற்கு என்ன காரணம்? அதற்கு சர்வதேச நாடுகளிடையே நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையும், அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதுமே முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. மேலும் Bank of Baroda-வின் தலைமை பொருளாதார நிபுணரான மதன் சப்னாவிஸ், “டாலரின் மதிப்பு சமீப ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளது. டாலர் ஆதிக்கம் மூலம் ஏற்படும் தாக்கத்தை குறைக்க தங்கம் பாதுகாப்பான மாற்றாக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், RBI உட்பட மற்ற சர்வதேச மத்திய வங்கிகளும் தங்கம் வாங்குவதை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனாலும் சந்தையில் தொடர்ந்து தங்கத்திற்கு டிமாண்ட் இருந்துக்கொண்டே இருக்கிறது. இதனால் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்றே கணிக்கப்படுகிறது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதனை தங்கத்தின் மீதான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Latest news