இந்தியா… ஒரு காலத்தில் உலக அரங்கில் வளர்ந்துவரும் பொருளாதாரமாக தான் குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால் இப்போது? வளர்ந்துவிட்ட பொருளாதாரம் என்றே சொல்ல வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. சர்வதேச செலாவணி நிதியம் – IMF வெளியிட்டுள்ள ஏப்ரல் 2025 கணிப்பின் அடிப்படையில், இந்தியா 2025ஆம் ஆண்டுக்குள் ஜப்பானை முந்தி, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என உறுதியாகக் கூறப்பட்டுள்ளது.
இப்படியிருக்கும் பட்சத்தில், 2025ஆம் நிதி ஆண்டில் , இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி – $4,187 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஜப்பானின் $4,186 பில்லியனை விட சற்றே அதிகம். எளிமையாக சொல்வதானால், decimal புள்ளியில் இந்தியா ஜப்பானை வென்றுவிட்டது! 2024 வரை இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம். ஆனால் 2025-ல், அந்த இடத்தை விட்டுவிட்டு நான்காவது இடத்திற்கு வந்துவிடும்.
இந்த நிலை இப்படியே தொடரும் பட்சத்தில்… 2028-ஆம் ஆண்டில், இந்தியா ஜெர்மனியையும் முந்தி, மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என IMF கணித்துள்ளது. 2028-ல் இந்தியாவின் GDP $5,584 பில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனியின் GDP அதற்குக் குறைவாக 5,251 பில்லியன் டாலராக இருக்கின்றது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியா 2027-க்குள் $5 டிரில்லியன் பொருளாதாரமாக மாறும். இதுவே பல ஆண்டுகளாக இந்திய அரசு வலியுறுத்தி வந்த கனவு – இப்போது நிஜமாக மாறுகிறது.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் – 2025-ல் 6.2% என கணிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி மாத கணிப்பில் கூறப்பட்ட 6.5% விட சற்று குறைவு. ஆனால், இது ஏற்கத்தக்க மட்டத்தில் நிலைத்த வளர்ச்சி என்றே சொல்லப்படுகின்றது. குறிப்பாக கிராமப்புறங்களில் தனியார் நுகர்வு வளர்ந்திருப்பதும், அந்த வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கிறது.
இப்படியான சூழ்நிலையில், வர்த்தக பதட்டங்கள், மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் – சில சவால்களை ஏற்படுத்தினாலும், இந்தியாவின் பொருளாதார பாதை சீராகவே செல்கிறது. முக்கியமாக, இந்தியாவைத் தவிர, அமெரிக்கா மற்றும் சீனா தான் உலகின் முதல் இரண்டு பெரிய பொருளாதாரங்களாக தொடரும். அந்த நிலைமை இந்த தசாப்தத்துக்கெல்லாம் மாற வாய்ப்பே இல்லை என IMF கூறுகிறது.
கடந்த 80 ஆண்டுகளாக நிலவி வந்த உலகளாவிய பொருளாதார அமைப்பு, இப்போது மீட்டமைக்கப்படுவதும், ஒரு புதிய சகாப்தத்திற்கு உலகம் செல்ல தயாராக இருப்பதும், இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படுகிறது.