இந்தியா மற்றும் அமெரிக்கா கூட்டாக, உலகத்திலேயே மிகவும் ஆபத்தானதாக கருதப்படும் Anti-tank guided missile என்னும் தொட்டி எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரிக்க ஒரு பெரிய திட்டத்தை தொடங்கியிருக்கின்றன. இந்த திட்டம் இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கு மட்டும் அல்லாமல், ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கும் மிகப் பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்த ஏவுகணை, சாதாரண ஏவுகணை அல்ல. இதை தோளில் வைத்தே சுட முடியும்.
‘Javelin Missile’ என அழைக்கப்படும் இந்த ஈட்டி ஏவுகணை குறிவைத்தவுடனே இலக்கை தொடர்ந்து தாக்கும் சக்தி உடையது. அதாவது, சுடும் நபர் அங்கிருந்து விலகிய பிறகும், ஏவுகணை தானாகவே இலக்கை அடையும். இதைதான் Fire and Forget Technology என்கிறார்கள்.
இந்த ஏவுகணையின் முக்கிய தன்மை என்னவென்றால், இது டாங்கியின் மேல் பகுதியில் நேராக தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. டாங்கியின் மேல்பகுதி என்பது, அதன் பாதுகாப்பு சற்று குறைவாக இருக்கும் இடம். அதனால்தான், மேலிருந்து தாக்கும் இந்த ஏவுகணை, டாங்கியை விரைவாக அழிக்கும்
திறன்-ஐ பெறுகிறது. உக்ரைன்–ரஷ்யா போர் நடந்தபோது கூட, இந்த ஏவுகணை ரஷ்யாவின் பல டாங்கிகளை முற்றிலுமாக நாசமாக்கியது. இதுவே அந்த போரில் இந்த ஏவுகணைக்கு பெரிய வெற்றி எடுத்துத் தந்தது.
இந்த தொழில்நுட்பத்தை இப்போது இந்தியாவிலும் உருவாக்கும் நோக்கில் அமெரிக்காவுடன் உரையாடல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வழியில், இந்தியா உற்பத்தியின் மூலமாக தன்னிறைவை நோக்கி சென்று, பாதுகாப்பு தொழில்துறையில் இன்னொரு படி உயருகிறது.
இந்தியாவின் ராணுவ ஆய்வுப் பிரிவான DRDO ஏற்கனவே MPATGM எனப்படும் கையடக்க தொட்டி எதிர்ப்பு ஏவுகணையை உள்நாட்டில் உருவாக்கி, வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள போக்ரான் கள சோதனை மையத்தில் நடந்த இந்த சோதனைகள், இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
இந்த திட்டத்தின் மூலம், இந்தியா அதிகமாக இறக்குமதி செய்ய வேண்டிய தேவை குறையும். அதேசமயம், அமெரிக்காவுடன் பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுப்படும். தொழில்நுட்ப மாற்றம், தொழில்நுட்ப பரிமாற்றம், வேலைவாய்ப்புகள், பாதுகாப்பு துறையில் வளர்ச்சி — இவை அனைத்தும் ஒரே நேரத்தில் கிடைக்கப்போகின்றன.
இந்த முன்னேற்றம், இந்தியா ஒரு நவீன பாதுகாப்பு சக்தியாக வளர்வதற்கான ஒரு முக்கிய அடித்தளமாகும். உலகமே கவனித்து பார்க்கும் ஒரு படைப்பாக இது அமையப்போகிறது என்பதில் சந்தேகமேயில்லை.