இந்தியா மீது பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் தரைவழி தாக்குதலை தொடங்கியிருக்கும் இந்நிலையில், இந்த மோதலை கைவிட வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு “பதிலடி கொடுக்கிறோம் பேர்வழி” என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லை பகுதிகளான ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய பகுதிகளை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை ஏவி நடத்திய தாக்குதலை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு துவம்சம் செய்தது.
ஆனாலும் ஷெல் குண்டுகள் ஜம்மு காஷ்மீரின் எல்லை பகுதிகளில் சில பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குண்டு விழுந்ததால், உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல நேற்றிரவும் தாக்குதலை பாகிஸ்தான் தொடர்ந்திருந்தாலும் வழக்கம்போல இந்திய ராணுவமும், விமானப்படையும் அவற்றை இடைமறித்து முறியடித்திருக்கிறது.
ஆனால் இதேபோல தொடர்ந்தால் இந்தியாவின் பதிலடி கடுமையானதாக இருக்கும் என்பதாலும் இரு நாடுகள் வசமும் அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்பதாலும் இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதற்கிடையே இன்று காலை பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை தொலைபேசியில் தொடர்புகொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதலை நிறுத்தவும் இரு நாடுகளுக்கிடையே அமைதி உருவாக்கும் நடைமுறைகளை செயல்படுத்தவும் இரு நாட்டு நல்லுறவுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் எனவும் கூறியிருக்கிறார். இது பாகிஸ்தானின் “எடுத்தேன் கவிழ்த்தேன்” என்ற போக்கை நிறுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.