Wednesday, December 24, 2025

இரத்த சோகையை வெளிப்படுத்தும் 5 அறிகுறிகள்! கவனிக்காவிட்டால் ஆபத்து

உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்சிஜெனை கடத்தி செல்வதில், இரத்தத்தில் உள்ள  ஹீமோகுளோபின் என்னும் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஹீமோகுளோபின் உற்பத்தி ஆவதற்கு முக்கிய காரணியாக செயல்படும் இரும்பு சத்து குறையும் போது, இரத்த சோகை ஏற்படுகிறது. உடலில் உள்ள இரும்பு சத்து குறைவதை முடி, சருமம் மற்றும் நகங்களில் ஏற்படும் மாற்றங்களை கவனித்தாலே கண்டுபிடித்துவிடலாம். இரத்தத்தில் உண்டாகும் ஆக்சிஜென் அளவு குறைபாடு தலைமுடியை வெகுவாக பாதிக்கிறது.

வறண்ட, பாதிக்கப்பட்ட முடி அதிகமாக உதிர தொடங்குவது மருத்துவ ரீதியாக கவனிக்கப்பட வேண்டிய அறிகுறி ஆகும். அதிலும், இரும்பு சத்து குறைவதால் ஏற்படும் முடி உதிர்வு, தலைமுடி ஈரமாக இருக்கும் போதும் அதிக வெளிச்சமான இடத்தில் இருக்கும் போதும் ஏற்படும் என கூறப்படுகிறது.

சருமத்தில் காணப்படும் சிகப்பான நிறம், உள்ளிருக்கும் ஆரோக்கியமான இரத்தத்தின் வெளிப்பாடு ஆகும். ஹீமோகுளோபின் குறைந்த இரத்தம் வெளிர்நிறமாக மாறுவதால் சருமமும் வெளிர் நிறமாக காட்சியளிக்கும்.

கண்ணின் கீழ் இமையை இழுத்து பார்த்தால் அடர்ந்த சிகப்பு நிறம் சரியான ஹீமோகுளோபின் அளவையும், வெள்ளை மற்றும் பிங்க் நிறமாக காட்சி அளிக்கும் கண்களின் கீழ் இமை இரத்த சோகையை சுட்டிக்காட்டுவதாகவும் அமைகிறது.

வளைந்த மற்றும் உடைந்து கொண்டே இருக்கும் நகங்களும் இரத்த சோகைக்கான வலுவான அறிகுறியாக அமைவதால், இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை பெறுவது அவசியமாகிறது.

Related News

Latest News