ரஷ்யா-உக்ரைன் போர் 3 ஆண்டுகளை கடந்து தொடர்கிறது. இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டு வர களத்தில் இறங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதில் முக்கிய முயற்சியாக, ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்காவின் அலஸ்காவிற்கு அழைத்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தனது சிறப்பு விமானத்தில் அலஸ்கா சென்ற புதினுக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. அடுத்ததாக சந்திப்பு நடைபெற இருந்த இடத்திற்கு இருவரும் ஒரே காரில் புன்முறுவலோடு பயணித்தனர்.
தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் புதின் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தனது பேச்சை தொடங்கிய புதின், டிரம்ப் உடனான சந்திப்பு தாமதமாக நடந்த ஒன்று என்று தெரிவித்தார். போர் ஆரம்பமானதற்கான முக்கிய பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று புதின் குறிப்பிட்டார். அதாவது நேட்டோவில் உக்ரைன் இணைவது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்என்று புதின் உறுதிபட தெரிவித்தார்.
அதன் பின் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாக குறிப்பிட்டார். ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் செய்தியாளர்கள் சந்திப்பு நிறைவு பெறுவதற்கு முன்பு, சீக்கிரமாக மீண்டும் சந்திப்போம் என்று டிரம்ப் கூறினார். அதற்கு, அடுத்த முறை மாஸ்கோவில் என்று புதின் பதில் அளித்தார். ஆனாலும் இருவரும் செய்தியாளர்களின் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பின்னர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த டிரம்ப், உடன்பாடிற்கு உக்ரைன் ஒத்துழைக்க வேண்டும் என்று புதின் கேட்டுக்கொண்டார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற புதின்-டிரம்ப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. டிரம்ப்பின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை உலகமே எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது.