Thursday, April 3, 2025

குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! நோட் பண்ணுங்க மக்களே!

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. அது என்னவென்றால் ஏப்ரல் மாதம் தொடங்கியிருக்கும் நிலையில், நியாயவிலைக் கடைகள் சேவைகள் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் இலவச வாட்ஸ்அப் எண் மற்றும் தொலைபேசி வாயிலாக அழைத்து புகார் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்ட ஆட்சியர் உப்பிடமங்கலம் மற்றும் லிங்கத்தூர் நியாய விலைக் கடைகளில் ஏப்ரல் 1 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்குப் பின் பேசிய மாவட்ட ஆட்சியர், “கரூர் மாவட்டத்தில் 403 முழுநேரம் மற்றும் 233 பகுதி நேரம் நியாய விலைக்கடைகள் என மொத்தம் 636 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைகள், AAY அட்டைகள். சர்க்கரை விருப்ப அட்டைகள். காவலர் அட்டைகள், வன காவலர் அட்டைகள் உள்ளிட்ட 3.37,531 குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை. துவரம் பருப்பு. பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்திலுள்ள 3.37.531 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 5264.310 மெடன் அரிசி. 435,072 மெடன் சர்க்கரை. 132.934 மெடன் கோதுமை, 24.000 லிட்டர் மண்ணெண்ணெய், 281.532 மெடன் துவரம் பருப்பு மற்றும் 2,85,934 லிட்டர் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களின் தரம், அளவு மற்றும் கடைகள் சரியான நேரத்தில் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள் குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இலவச சேவைகள் மற்றும் புகார்கள் குறித்து 1967 மற்றும் 1800-425-5901 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும், அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து புகார் தெரிவிக்க 1800-599-5950 மற்றும் 9677736557 என்ற வாட்ஸ் அப் எண்களில் புகார் தெரிவிக்கலாம்” என கூறியுள்ளார். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அந்தந்த மாவட்ட இலவச தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ்அப் எண்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல், ரேஷன் அரிசி பொருட்களின் தரம் தொடர்பாக புகாரளிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Latest news