விபத்தில் சிக்கியவா்களுக்கு எவ்வித முன்பணமும் பெறாமல் உடனடி அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , கா்நாடக தனியாா் மருத்துவ நிறுவனங்கள் சட்டம் 2007-ன்படி, விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி உள்ளிட்டவற்றை எவ்வித முன்பணம் இன்றி மருத்துவமனைகள் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவா்களின் உடல்நிலையில் உடனடியாக முன்னேற்றம் ஏற்படும் வகையில், துரிதசிகிச்சைகளை மருத்துவமனைகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத மருத்துவமனைகள், வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றுவதற்கு முன் உயிா்பிழைக்கக் கூடிய சிகிச்சைகளை அளித்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் சிக்கியவா் என்பது மட்டுமல்ல, தீக்காயங்களால் பாதிக்கப்பட்டோா் அல்லது நஞ்சு உட்கொண்டோா் அல்லது பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டவா்கள் அல்லது சட்டரீதியாக அணுகக்கூடிய மருத்துவ தேவைகள் தேவைப்படுவோருக்கும் உடனடியாக அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வித தாமதமும் இல்லாமல் விபத்தில் பாதிக்கப்பட்ட நபரின் உயிரைக் காக்க மருத்துவா்கள், மருத்துவமனைகள் விரைந்து செயல்பட வேண்டும் என்றும், இதை செய்யத் தவறினால், உரிய தண்டனைக்கு உள்ளாக்கப்படுவாா்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, விபத்தில் சிக்கியவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றுவது சம்பந்தப்பட்ட மருத்துவ நிறுவனங்களின் கடமை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.