கடந்த சில மாதங்களாக தங்கம் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இன்றைய விலை சற்று குறைந்திருந்தாலும் சராசரியாக உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்கா வட்டி விகிதத்தை குறைக்கும் என்கிற எதிர்பார்ப்பு, உலக அரசியல் பதற்றங்கள், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேடும் நிலை ஆகியவை விலையைப் புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன.
ஆனால் நிபுணர்கள் ஒன்றே ஒன்றை சுட்டிக்காட்டுகின்றனர். அது என்னவென்றால் பணவீக்கம் குறைந்தால்தான் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு உண்டு. இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. பணவீக்கம் அதிகமாக இருக்கும் போது மக்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை வாங்குவார்கள்.
இதனால் தங்கத்தின் தேவை அதிகரிப்பதால் விலை ஏறும். அதே நேரத்தில் பணவீக்கம் குறைந்துவிட்டால், முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, பத்திரங்கள் போன்ற இடங்களில் பணத்தை முதலீடு செய்வார்கள்.
அப்போது தங்கத்துக்கான தேவை குறைந்து, விலை இயல்பாகக் குறையும். தற்போதைய நிலையை பார்க்கும்போது உலக சந்தையில் தங்கம் விலை 3,500 டாலரை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
இந்திய சந்தையில் 10 கிராம் தங்கம் ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாயை எட்டியுள்ளது. ஆனால் பணவீக்கம் குறைவதற்கான சிக்னல்கள் வந்துவிட்டால், இந்த உயர்வு நீடிக்காது என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அரசியல் பதற்றம், வட்டி விகித மாற்றம் போன்றவை தங்கத்தின் விலையை பாதிக்கலாம். ஆனால் ‘பணவீக்கம் குறைந்தால் மட்டுமே தங்க விலை உண்மையாகக் குறையும்’ என்பதே நிபுணர்களின் கருத்து.
இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதை தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.