உலகம் மீண்டும் ஒரு அணு ஆயுதப் போட்டியின் விளிம்பில் நிற்கிறதா? ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்காவுக்கு விடுத்துள்ள ஒரு பகிரங்க எச்சரிக்கை, உலக நாடுகளை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ‘New START’ என்ற ஒரு முக்கியமான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் இருக்கிறது. இந்த ஒப்பந்தம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காலாவதியாகிறது. இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்கா மறுத்தால், “அது ஒன்னும் பெரிய விஷயமில்லை” என்று புடின் கூறியுள்ளார்.
ஏன் அப்படிச் சொன்னார்? “ஏனென்றால், நாங்கள் ஏற்கனவே அடுத்த தலைமுறை அணு ஆயுதங்களை உருவாக்கி, சோதனை செய்து வருகிறோம். அதனால், இந்த ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் எங்களுக்குக் கவலையில்லை” என்பதுதான் புடினின் செய்தி. “ஏற்கனவே ஒரு ஆயுதப் போட்டி தொடங்கிவிட்டது” என்றும் அவர் கூறியுள்ளார். அதே சமயம், “உலகின் இரண்டு பெரிய அணு ஆயுத வல்லரசுகளுக்கு இடையே எந்த ஒரு கட்டுப்பாட்டு ஒப்பந்தமும் இல்லாமல் போவது அவமானகரமானது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “வேறு சில நாடுகள் அணு ஆயுத சோதனை நடத்தத் தயாராகி வருகின்றன. அவர்கள் சோதனை செய்தால், நாங்களும் செய்வோம்” என்று புடின் மர்மமாகப் பேசியுள்ளார். இது வட கொரியாவை மனதில் வைத்துச் சொல்லப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு நாடு சோதனை செய்தால், மற்ற நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு சோதனை செய்யத் தொடங்கும். இது, உலகை மீண்டும் ஒரு பனிப்போர் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும். இந்தச் சூழலில், குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது ஒப்பந்தத்தை நீட்டிப்பதே புத்திசாலித்தனம் என்றும் புடின் கூறியுள்ளார்.
