சாலையோரம் அமர்ந்து காய்கனி விற்ற ஐஏஎஸ் அதிகாரி
பற்றிய விசயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலப் போக்குவரத்துத் துறை
சிறப்புச் செயலாளராக இருப்பவர் அகிலேஷ் மிஸ்ரா.
ஐஏஎஸ் அதிகாரியான இவர், தான் சாலையோரம் அமர்ந்து
காய்கனி விற்றதை தன்னுடைய பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
ஓர் ஐஏஎஸ் அதிகாரி ஏன் இப்படி காய்கனி விற்றார் என்பது
பெரிய விவாதமாகியுள்ளது.
இதுபற்றி விளக்கமளித்துள்ள அகிலேஷ் மிஸ்ரா,
”அலுவல் வேலையாக பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகருக்குச்
சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது
சாலையோரம் உள்ள காய்கனிக் கடையில் காய்கனி
வாங்கினேன்.
அதேசமயம், காய்கனிக் கடை விரித்திருந்த பெண்மணி
தனது குழந்தையைப் பார்த்துவிட்டு சிறிதுநேரத்தில்
வந்துவிடுவதாகவும், அதுவரையில் கடையைப்
பார்த்துக்கொள்ளும்படியும் கூறிவிட்டுச் சென்றார்.
நானும் கடையின்முன் நின்றுகொண்டிருந்தேன். அப்போது
அங்குவந்த வாடிக்கையாளர் ஒருவர் ‘காய்கனி வேண்டும்’
என்றார். நானும் அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு
காய்கனி வழங்கினேன்.
இதனை என்னுடன் வந்தவர் செல்போனில் புகைப்படம் எடுத்து
சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவிட்டார். நடந்தது இவ்வளவுதான்”
என்று பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து விமர்சனங்கள் அடங்கிவிட்டன. ஆனாலும்,
அகிலேஷ் மிஸ்ரா ஐஏஎஸின் இந்த எளிமையான செயல்
பொதுமக்களை ஈர்த்து வருகிறது.