தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தொகுதிகளின் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. இது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது : 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள, பாஜகவை சேர்ந்த வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஊழல், செயலற்றத்தன்மை மற்றும் திமுகவின் துரோகம் ஆகியவற்றால் சலிப்படைந்துள்ள தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரர் மற்றும் சகோதரியின் ஆதரவையும் இவர்கள் பெற்றுள்ளனர்.
நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குமிக்க தலைமையின் கீழ், இந்தியா வலிமையுடனும், பிரம்மாண்டத்துடனும், ஒரு தெளிவான நோக்கத்துடனும் முன்னேறி வருகிறது. தேசம் இவ்வாறு முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், தோல்வியடைந்த, ஆணவம் நிறைந்த மற்றும் சுயநலம் மட்டுமே கொண்ட திமுக அரசால் தமிழ்நாடு பின்தள்ளப்பட்டுள்ளது.
ஒரு கட்சித் தொண்டனாக (Karyakarta), வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் NDA கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன், நமது வெற்றி வேட்பாளர்களான பாஜக மற்றும் பிற NDA வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
