‘அணு ஆயுதத்தை நான் வாங்கிக்கொள்கிறேன்’! – அமெரிக்காவை அதிரவைத்த ரஷ்யாவின் திட்டம்!

அமெரிக்கா-ஈரான் இடையே போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்த மோதலின் மையப் புள்ளியாக இருக்கும் அணு ஆயுதப் பதற்றத்தைத் தணிக்க, ரஷ்யா முன்வைத்த ஒரு முக்கிய சமாதானத் திட்டத்தை அமெரிக்கா நிராகரித்திருப்பது, உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிராகரிப்பு, போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்காவுக்கு உண்மையில் விருப்பம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஈரானிடம் இருக்கும், அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படலாம் என அஞ்சப்படும், பதப்படுத்தப்பட்ட யுரேனியம் முழுவதையும் தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்ல ரஷ்யா முன்வந்தது. இதுவே அந்த சமாதானத் திட்டம். இது குறித்துப் பேசிய ரஷ்ய அதிபரின் மாளிகையான கிரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “ஈரானின் பதப்படுத்தப்பட்ட யுரேனியத்தை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள நாங்கள் தயாராக இருந்தோம். இது ஒரு மிகச் சிறந்த முடிவாக இருந்திருக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அமெரிக்கா இந்தத் திட்டத்தை நிராகரித்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரித்துவிடும் என்ற ஒரு காரணத்தை முன்வைத்தே, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், அந்தக் காரணத்தையே வேரோடு அகற்றும் விதமாக, அந்த யுரேனியத்தை ஈரானிடம் இருந்து பெற்று, அதனை அணு உலைகளுக்கான எரிபொருளாக மாற்றி, அச்சுறுத்தலை முற்றிலுமாக நீக்கிவிடுவதே ரஷ்யாவின் திட்டம். இந்தத் திட்டத்தை ஈரான் ஏற்றுக்கொள்வதும், அமெரிக்காவுடனான ஒரு பரந்த உடன்படிக்கையைப் பொறுத்தே அமையும் என ஈரான் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், எந்தவிதப் பேச்சுவார்த்தைக்கும் இடமளிக்காமல், ட்ரம்ப் நிர்வாகம் இந்தத் திட்டத்தை ஆரம்பத்திலேயே நிராகரித்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போருக்கான மூல காரணத்தையே தீர்க்க முன்வந்த ஒரு வாய்ப்பை அமெரிக்கா நிராகரித்திருப்பது, மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதை அது விரும்பவில்லையோ என்ற சந்தேகத்தை சர்வதேச அரசியல் நோக்கர்களிடையே வலுக்கச் செய்துள்ளது.

Related News

Latest News