மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுலின் பேச்சை கேட்டதில் தனக்கு 250 ரூபாய் நஷ்டமடைந்ததாக பீகார் மாநில பால் வியாபாரி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 15-ம் தேதி டில்லி கோட்லா சாலையில் ‛இந்திரா பவன்’ என்ற பெயரில் புதிய காங்கிரஸ் தலைமை அலுவலக கட்டட திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட மக்களவை எதிர்கட்சி தலைவரும் எம்.பி.யுமான ராகுல், இந்திய அரசை எதிர்த்து போராடுவோம் என்று பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பீஹாரின் சமஸ்டிபூர் மாவட்டம் சோனூப் என்ற கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் சவுத்ரி என்ற பால் வியபாரி, ராகுல்காந்தி மீது உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் இந்திய அரசை எதிர்த்து போராடுவோம் என ராகுல் பேசியதை கேட்டவுடன் அதிர்ச்சியடைந்ததாகவம், ராகுல்காந்தியின் பேச்சால் தனது கையில் வந்திருந்த 5 லிட்டர் கொண்ட பால்கேனை தவறவிட்டதால் தனக்கு 250 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளார்.
ராகுல்காந்திக்கு எதிராக பால் வியாபாரி தொடர்ந்த வழக்கு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதா, இல்லையா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.