உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள வழக்குகள் குறித்து வழக்கறிஞர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது வழக்கறிஞர் ஒருவர் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீது காலணி வீசி தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அங்கிருந்த பாதுகாவலா்கள் ராகேஷ் கிஷோா் என்ற வழக்கறிஞரை வெளியேற்றினர். ‘சனாதன தா்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று முழக்கத்தை எழுப்பியபடி அவர் வெளியேறினார்.
இந்த சம்பவம் குறித்து ராகேஷ் கிஷோர் கூறியதாவது : ”காலணியை வீசியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சரியானதைச் செய்துள்ளேன். இதனால் சிறைக்குச் செல்வேன், இதையெல்லாம் செய்வதற்கு கடவுள்தான் என்னை தூண்டினார்” எனத் தெரிவித்தார்.
வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் செயல் வழக்கறிஞரின் தொழில்சாா்ந்த நடத்தை மற்றும் சபை ஒழுக்கம் தொடா்பான இந்திய பாா் கவுன்சில் விதிகள் 1, 2 மற்றும் 3 பிரிவுகளை மீறும் வகையில் உள்ளது. எனவே, அவா் வழக்குரைஞராக பணியைத் தொடர இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.