இந்திய விமானப்படையின் தாக்குதல் திறனை மேலும் மேம்படுத்தும் நோக்கில், ரூ.1,500 கோடி மதிப்பில் மீட்டியோர் (Meteor) ஏவுகணைகளை வாங்குவதற்கான திட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த அதிநவீன ஏவுகணைகள், ரஃபேல் போர் விமானங்களின் போர்திறனை பெரிதும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் தற்போது இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கியமான முன்மொழிவுகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. விரைவில் நடைபெற உள்ள பாதுகாப்புத் துறை உயர்மட்ட குழுக் கூட்டத்தில் இதற்கான இறுதி ஒப்புதல் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனமான MBDA தயாரித்துள்ள மீட்டியோர் ஏவுகணை, 200 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இதன் வருகை இந்திய விமானப்படைக்கு வான்வழி பாதுகாப்பு மற்றும் நீண்ட தூர தாக்குதல்களில் கூடுதல் முன்னேற்றத்தை வழங்கும்.
இதேவேளை, 2016ம் ஆண்டில் பிரான்சில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கியபோது, இந்தியா இந்த மீட்டியோர் ஏவுகணைகளுக்கான ஆரம்ப ஆர்டரை ஏற்கனவே வழங்கியிருந்தது. தற்போது, அடுத்த ஆண்டு இந்திய கடற்படைக்காக வரவிருக்கும் 26 புதிய ரஃபேல் போர் விமானங்களுடன் சேர்த்து, இந்த ஏவுகணைகளும் இணைக்கப்படவுள்ளன.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இந்திய ரஃபேல் விமானங்கள் உலகின் மிக சக்திவாய்ந்த வான்போர் ஆயுத அமைப்புகளில் ஒன்றாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
