யானைகள் தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஒட்டுமொத்த ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில் தான் இருப்பதாக குறிப்பிட்டு, யானைகளின் பாதுகாப்பில் நமது அர்ப்பணிப்பை புதுப்பித்து கொள்ள வேண்டும் என ட்வீட் செய்துள்ளார்.
இது போன்ற நேர்மறையான அணுகுமுறை வரவேற்கத்தக்கது என்றாலும், நம் நாட்டில் மனிதனால் அவலங்களுக்கு உள்ளாகும் யானைகளின் நிலையை, அந்த கசப்பான உண்மையை உள்வாங்குவது அவசியம்.
வளமான இயற்கை சூழல் எங்குள்ளதோ அங்கு யானைகள் இருக்கும். அதே போல யானைகள் இருக்கும் இடம் செழிப்பாக இருக்கும் என்பதே சுற்றுசூழலியலின் விதியாக அமைந்துள்ளது.
எனினும், பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் தனிநபர்களின் தேவைக்காக வன ஆக்கிரமிப்பு நிகழ்வது சகஜமாக மாறிவிட்டது. மேலும், யானைகளின் இயல்பான வழித்தடத்திலேயே அவைகள் பொறி வைத்து கொல்லப்படுகின்றன.
2021 ஆய்வறிக்கையின்படி கடந்த பத்து வருடங்களில் இயற்கைக்கு அப்பாற்பட்டு மனிதனால் நிகழ்ந்த 1160 யானை மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 741 மின்சாரம் தாக்கிய இறப்புகள், இரயில் ஏறியதால் 186 இறப்புகள், வேட்டையாடுவதில் நிகழ்ந்த 169 இறப்புகள் மற்றும் விஷத்தினால் 69 இறப்புகளும் அடங்கும்.
மேலும், மேற்கு வங்கத்தில் யானையின் வாலை மக்கள் கொளுத்திய புகைப்படம், யானைகள் எதிர்கொள்ளும் சூழலியல் ஒடுக்குமுறைக்கு சான்றாக அமைந்துள்ளது. பிப்லாப் ஹஸ்ரா எனும் புகைப்பட கலைஞர் எடுத்த இந்த புகைப்படம் வனவியல் புகைப்பட போட்டிகளில் சர்வதேச கவனம் ஈர்த்தது.
அதே போல, கேரளாவில் செம்பனருவி அருகே காட்டுப்பன்றிகளை பிடிக்க பலாப்பழத்தில் வெடி மறைத்து வைக்கப்பட்டிருந்த பொறியில் கருவுற்றிருந்த யானை சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இது மட்டுமில்லாமல், மனிதனின் சுயநலம் சார்ந்த பல திட்டங்களால் தொடர்ந்து யானைகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இதனை தவிர்க்க விலங்குகள் மற்றும் வனவியல் சார்ந்த பொறுப்புணர்வும் விழிப்புணர்வும் அவசியம் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.