தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வரும் அக்டபோர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக பட்டாசு வெடிப்பதற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புடனும், கட்டுப்பாடனும் பட்டாசு வெடிக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில், ரயில்களில் பயணிக்கும்போது பயணிகள் தங்களுடன் பல பொருள்களை கொண்டுசெல்வார்கள். அதோடு சிலர் பட்டாசுகளையும் கொண்டுசெல்வார்கள். இவ்வாறு யில்களில் பயணிகள் பட்டாசுகளை, வெடிகளை கொண்டுவந்தால் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள்.
ரயில்வே விதியின்படி, எளிதில் தீப்பிடிக்கும் அல்லது வெடிக்கும் பொருள்களுடன் ரயில்களில் பயணிக்க தடை உள்ளது. அதில் பட்டாசுகளும் அடங்கும். சிறு தீப்பொறி ஏற்படுவதன் மூலமோ அல்லது தவறு நடந்தாலோ மொத்த ரயிலும் தீப்பிடித்துவிடும் ஆபத்து உள்ளது. ரயில்களில் பட்டாசுகளை கொண்டுச்செல்வதால் விதிகளை மீறுவது மட்டுமின்றி, அதே ரயிலில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
தடை செய்யப்பட்ட பொருட்களை பயணிகள் ரயிலில் எடுத்து சென்றால் ரயில்வே சட்டத்தின் பிரிவு 164-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பிரிவின் கீழ், பயணிக்கு 1,000 ரூபாய் அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்கப்படலாம்.
