செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக விளக்கம்!!

தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

இதையடுத்து, திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த வழக்கு முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துடன் தொடரப்பட்டதாகவும், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தால் ரூ.35 கோடி வழங்கப்படும் என பேரம் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.

ஆனால், அந்த தொலைபேசி அழைப்பு ஜூன் 26-ஆம் தேதி வந்ததாக கூறப்பட்ட நிலையில், ஜூன் 29-ஆம் தேதிதான் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடைவெளியில் புகாரை எவ்வாறு உருவாக்குவது என ஆலோசித்து தயாரிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வாதிட்டதாக இளங்கோ கூறினார்.

மேலும், செந்தில் பாலாஜி அல்லது அவரது சகோதரருக்கு எதிராக நேரடி சாட்சியங்கள் எதுவும் இல்லை என்றும், காவல்துறையிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரசு தரப்பும், சம்பவ நாளில் செந்தில் பாலாஜியும் திருநாவுக்கரசும் ஈரோட்டில் இருந்தனர் என்பதைத்தவிர வேறு எந்த உறுதியான ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்றார். இந்த வழக்கில் திமுக மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் “அரசைக் கவிழ்க்கும் சதி” என்ற குற்றச்சாட்டு திட்டமிட்டு சேர்க்கப்பட்டதாகவும், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிப்பது மட்டும் அரசை கவிழ்ப்பதாக கருத முடியாது என்றும் இளங்கோ விளக்கினார்.

மேலும், முன்ஜாமீன் மனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அரசு தரப்பின் பதில் மனுவில் “அரசைக் கவிழ்க்க வேண்டும்” என்ற வாசகம் நீக்கப்பட்டிருப்பது, அந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததையே வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த உயர்நீதிமன்றம், போதுமான ஆதாரங்கள் இல்லாததை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியதாக என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.

Related News

Latest News