மார்ச் 24ம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற லக்னோ- டெல்லி Match, IPL வரலாற்றின் ஆகச்சிறந்த போட்டிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 209 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் மார்ஷ், பூரான் இருவரும் டெல்லி பவுலர்களின் பந்துவீச்சை, நாலாபுறமும் சிதறடித்து வாணவேடிக்கை காட்டினர்.
இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன், களமிறங்கிய டெல்லிக்கு ஆரம்பத்திலேயே அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் காத்திருந்தன. ஆமாம். 1.4 ஓவர்களிலேயே Fraser, Porel, Rizvi என்று 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து டெல்லி தடுமாறியது.
களத்தில் சற்று நேரம் போராடிய கேப்டன் அக்சர் படேல் 22 ரன்களிலும், துணை கேப்டன் டூ பிளசிஸ் 29 ரன்களிலும் நடையைக் கட்டினர். இதனால் டெல்லி மாபெரும் ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஆனால் அதற்குப்பிறகு நடந்தது எல்லாமே வரலாறு தான். அந்த அணியின் விப்ராஜ் நிகம் 15 பந்தில் 31 ரன்கள் குவிக்க, Impact வீரராகக் களமிறங்கிய ஆசுதோஷ் சர்மா 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து, லக்னோவின் கையில் இருந்த வெற்றியைத் தட்டிப்பறித்து விட்டார்.
இதனால் சமூக வலைதளங்களில் ஆசுதோஷை, ரசிகர்கள் வானாளாவப் புகழ்ந்து வருகின்றனர். அதேநேரம் லக்னோ கேப்டன் பண்ட் ரசிகர்களிடம் சிக்கி படாதபாடு பட்டு வருகிறார். ஏனெனில் லக்னோ வெற்றி பெற லட்டு போல 2 வாய்ப்புகள் கிடைத்தும், அவர் அதைக் கோட்டை விட்டுவிட்டார்.
19 ஓவர்கள் முடிவில் டெல்லி 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்னமும் ஒரேயொரு விக்கெட் எடுத்தால் லக்னோவின் வெற்றி உறுதியாகி விடும். லட்டுபோல் அதுவும் பண்டின் கைக்கு கிடைத்தது. கடைசி ஓவரின் முதல் பந்தை, மோஹித் சர்மா இறங்கி அடிக்க முற்பட்டபோது, அவரை ஸ்டெம்பிங் செய்ய சான்ஸ் கிடைத்தது.
பண்ட் அதனைத் தவற விட்டுவிட்டார். அந்த ஸ்டெம்பிங் சான்ஸ் மிஸ் ஆனதும், LBW அப்பீல் செய்வதில்தான் ரிஷப் கவனமாக இருந்தார். அந்த நேரம், மோஹித் ரன் ஓட முற்பட்டார். அப்போது, ரிஷப் சுதாரித்து, பீல்டர் கொடுத்த த்ரோவை வாங்கி ஸ்டெம்பில் வைத்திருந்தாலே, லக்னோ அணி வென்றிருக்கும்.
ஆனால் அதையும் அவர் செய்யவில்லை. இப்படி, ஒரே நேரத்தில் இரு முறை விக்கெட்டை எடுக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். போட்டி முடிந்ததும் அளித்த பேட்டியில், ” பந்து மோஹித்தின் பேடில் படாமல் இருந்திருந்தால், ஸ்டெம்பிங் செய்திருப்பேன்,” என்று, தன்னுடைய தவறுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவரின் இந்த விளக்கத்தை லக்னோ ரசிகர்கள் ஏற்கவில்லை. ”நல்ல சான்ஸ் கிடைச்சும் விட்டுட்டாரு. 27 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தும் பேட்டிங், விக்கெட் கீப்பர், கேப்டன் என, எந்த விஷயத்தையும் ரிஷப் பண்ட் சரியாகக் கையாளவில்லை” என்று, அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
6 பந்துகளை சந்தித்தும் ரன் எதுவும் எடுக்காமல், டக்அவுட் ஆகி ரிஷப் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.