Thursday, July 31, 2025

80 நாடுகளில் ‘America’ ராணுவ தளங்கள் ‘India’ மட்டும் எப்படி தப்பித்தது?

உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவிற்கு, அடுத்த நாட்டில் நடக்கும் விஷயங்கள் என்றால் அல்வா சாப்பிடுவது போல. இரு நாடுகள் சண்டை போட்டுக் கொண்டால், சமாதானம் செய்வது போல உள்ளே புகுந்து அதில் குளிர்காய்வது  அமெரிக்காவின் ஸ்பெஷல் ஆகும். இதனால் தான் உலக நாடுகளின் நாட்டாமையாக அந்நாடு பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் அமெரிக்கா ராணுவ தளம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று அண்மையில் வெளியாகி இருக்கிறது. ஜெர்மனி, ஜப்பான்,தென் கொரியா என உலகின் 80 நாடுகளில் சுமார் 750க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ளன. ஆனால் இந்தியாவில் அமெரிக்காவின் ராணுவ தளம் ஒன்றுகூட இல்லை. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் அமெரிக்கா ராணுவ தளம் இல்லாமல் போனதற்கு, இந்தியாவின் ராணுவ கொள்கையே முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே ஒருமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியர்கள் எண்ணற்ற துயரங்களை அனுபவத்து விட்டனர். இதனால் மீண்டும் அதுபோன்ற ஒரு விஷயம் நடக்கக்கூடாது என இந்தியா நினைக்கிறது. முதல் பிரதமராக பதவியேற்ற நேரு தொடங்கி தற்போதைய பிரதமர் மோடி வரை இதில் உறுதியாக உள்ளனர்.

இந்திய மண்ணில் வெளிநாட்டு ராணுவ தளங்களுக்கு எப்பொழுதும் அனுமதி கிடையாது. எவ்வளவு எதிர்ப்புகள், அழுத்தங்கள் வந்தாலும் கூட, இந்த விஷயத்தில் துளியும் இறங்கி செல்லக்கூடாது என்பது தான் இந்தியாவின் தாரக மந்திரம். அமெரிக்கா பிற நாடுகளில் ராணுவ தளங்களை அமைப்பது அதன் சொந்த நலத்திற்காக தான், என்பதையும் இந்தியா நன்கு உணர்ந்துள்ளது.

இதுபோன்ற ராணுவ தளங்கள் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு சிக்கலையே ஏற்படுத்துகின்றன. சமீபத்திய ஈரான் – இஸ்ரேல் போரில்கூட இதை நன்கு பார்க்க முடிந்தது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டதால், ஈரான் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி பதிலடி கொடுத்தது. இதனால் இந்த போரில் சிறிதும் சம்பந்தப்படாத கத்தார் வான்வழியை மூடியதுடன், பெருத்த நஷ்டத்தையும் சந்தித்தது.

இதுபோன்ற காரணங்களால் தான் அமெரிக்கா ராணுவ தளங்களை இந்தியா அனுமதிக்கவில்லை. அத்துடன் உலகின் மிகப்பெரிய ராணுவத்தை கொண்டிருப்பதால், பாதுகாப்புக்கு எந்த நாட்டையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் இந்தியாவிற்கு இல்லை. இதனால் அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டாலும், அமெரிக்க ராணுவ தளங்களுக்கு இந்தியா அனுமதி அளிக்கவில்லை.

அதேநேரம் தஜிகிஸ்தான், மொரீஷியஸ், பூட்டான் ஆகிய நாடுகளில் இந்தியா தன்னுடைய ராணுவ தளங்களை அமைத்துள்ளது. என்றாலும் அந்த நாடுகளின் கொள்கைகளில் அமெரிக்கா போல இந்தியா தலையிடுவது கிடையாது. அமெரிக்கா மட்டுமின்றி பிற வல்லரசு நாடுகளான சீனா, ரஷ்யாவுடன் நல்லுறவை பேணுவதும் இந்தியாவின் இந்த தீர்க்கமான முடிவுக்கு, முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News