வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்த சட்டத்தில் மேலும் சில திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி மக்களவையில் ஒரு மசோதாவை தாக்கல் செய்தது.
இந்த மசோதாவிற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில சட்டசபைகள் இந்த மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
இந்நிலையில், இந்த திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, “வக்பு மசோதா மூலம் மசூதிகள் கையகப்படுத்தப்படும் என்பது முற்றிலும் தவறான தகவல். வக்பு வாரிய நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை. இந்த மசோதா வக்பு வாரியத்தின் நிர்வாகத்தை மேம்படுத்தவும், குறைந்தபட்ச திருத்தங்களை மேற்கொள்ளவும் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “இந்த மசோதாவை எதிர்ப்பவர்களை வரலாறு மன்னிக்காது” என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.