ஓட்டல் அதிபராக உயர்ந்த பிச்சைக்காரச் சிறுமி

330
Advertisement

ரயில் நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த சிறுமி, தற்போது உணவகம் ஒன்றின் அதிபராக உயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

பீகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த அந்தச் சிறுமியின் வாழ்க்கைப் பயணம் கோடிக்கணக்கான சிறுமிகளுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.

குழந்தைப் பருவத்தில் பாட்னா ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில், பிச்சையெடுக்கத் தொடங்கினாள் அந்தச் சிறுமி. ஆனால், இன்று அபரிமிதமான மன உறுதியுடன் தனது சொந்த ஊரில் ஓர் உணவகத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.

பத்தொன்பது வயதாகும் ஜோதிக்கு இன்றுவரை தனது பெற்றோர் யார் என்றே தெரியாதாம். பாட்னா ரயில் நிலையத்தில் ஒரு பிச்சைக்காரத் தம்பதியால் கைவிடப்பட்டதாகக் கூறும் ஜோதி, கடினமாக நாட்களைக் கடந்த காலத்தில் அனுபவத்திருந்தாலும், பல நல்ல மனிதர்களின் உதவியால் வாழ்க்கையில் முன்னேறிச் சென்றதாக ஆனந்தமடைகிறார்.

தன்னைத் தத்தெடுத்தப் பிச்சைக்காரத் தம்பதியுடன் சேர்ந்து பிச்சையெடுத்த ஜோதி, பிச்சையெடுத்தபோது வருமானம் குறைவு என்பதால், குப்பைகளைப் பொறுக்க ஆரம்பித்தாராம். தனது குழந்தைப் பருவம் கல்வியின்றி கடந்துவிட்டாலும், தற்போது கல்வி கற்கத் தொடங்கியுள்ளதாக மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார். ஆனால், கல்வி கற்கத் தொடங்கியபோது தனது வளர்ப்புத் தாயை இழந்துவிட்டதாகக்கூறி வருந்துகிறார்.

அறக்கட்டளை ஒன்றின்மூலம் முதலில் ஓவியப் பயிற்சி எடுத்துக்கொண்ட ஜோதிக்கு தனியார் நிறுவனத்தில் உணவகம் நடத்தும் வாய்ப்பு கிடைத்ததும் அதை சரியாகப் பயன்படுத்தி ஒரு தொழிலதிபராக உயர்ந்துள்ளார்.

தன் சொந்த சம்பாத்தியத்தில் வாழ்ந்துவரும் ஜோதி, தற்போது வாடகை வீட்டில் வசித்துவருவதாகக் கூறுகிறார். நாள் முழுவதும் உணவகத்தை நடத்துவதாகவும், ஓய்வு நேரத்தில் படித்துவருவதாகவும் கூறும் இந்த சாதனைச் சிறுமி, எதிர்காலத்தில் மார்க்கெட்டிங் துறையில் சாதிக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருக்கிறார்.

தன்னம்பிக்கை இல்லாதோருக்கும், சாதிக்கத் துடிப்போருக்கும் ஒரு கலங்கரை விளக்காகத் திகழ்ந்துவருகிறார் ஜோதி.