ஃபுஜியன் மாகாணம் சியாமெனில் வசிக்கும் ஹுவாங் என்ற சிறுவன், பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை 16,700 யுவான் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.2 லட்சம் செலவில் உயரம் அதிகரிக்கும் சிகிச்சையை பெற்றார். சிகிச்சை காலத்தில் அவரது உயரம் 165 செ.மீ.யிலிருந்து 166.4 செ.மீ. வரை உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை முடிந்ததும், மீண்டும் 165 செ.மீ. உயரத்துக்கு குறைந்துவிட்டது.
இதையடுத்து அவரது தந்தை, சிகிச்சை அளித்த நிறுவனத்திடம் புகார் தெரிவித்தார். அப்போது, ‘உங்கள் மகனுக்கு வயது காரணமாக சிகிச்சை பயனில்லை’ என்று ஊழியர்கள் கூறியதாகவும், பணத்தைத் திருப்பித் தருவதாகவும் உறுதியளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு முன்பே உண்மையைச் சொல்லாத அந்த நிறுவனத்தை தந்தை கடுமையாக விமர்சித்தார்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட தகவல் படி, சிறுவன் ஒவ்வொரு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சிகிச்சை பெற்றார். கால்களை நீட்டுதல், முழங்கால்களை செயல்படுத்துதல் போன்ற பயிற்சிகள் அதில் இடம்பெற்றன.
மருத்துவ நிபுணர்கள், இப்படியான முறைகள் அறிவியல் பூர்வமற்றவை என கண்டனம் தெரிவித்துள்ளனர். பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் எண்டோகிரினாலஜி நிபுணர் வு சூயன், ‘மனித உடலை நீட்டி உயரம் அதிகரிக்க முடியாது. உடற்பயிற்சி, நல்ல உறக்கம், இயற்கையான வளர்ச்சி காரணிகளே நம்பகமான வழிகள்’ என கூறினார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பெற்றோரின் கவலையை வணிகமாக்குவதாக பலரும் நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.