தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குச் சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 15 முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழையுடன், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். வடபழனி, கோடம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே லேசான மழை பெய்து வருகிறது.
