மனிதர்கள் திருமணத்தால் கோழிகளுக்கு ஹார்ட் அட்டாக்

232
Advertisement

திருமண விருந்தில் நடைபெற்ற இசைவிருந்தின் சத்தத்தால் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு 63 கோழிகள் இறந்துபோனதாக விவசாயி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்திலுள்ள மைதாபூர் கிராமத்தில் சில தினங்களுக்குமுன் இரவு 11 மணியளவில் மணமகன் திருமண ஊர்வலம் நடந்தது. உரத்த இசை மற்றும் நடனத்தோடு அந்த ஊர்வலம் களைகட்டியது. அப்போது பட்டாசுகளையும் வெடித்தனர்.

அவர்கள் ஊர்வலம் வரும் வழியில் கோழிப் பண்ணை வைத்திருந்த ரஞ்சித் பரிதா என்ற தொழிலதிபர், எனது பண்ணையில் 2,000 கோழிகள் இருக்கின்றன. சத்தத்தைக் கொஞ்சம் குறையுங்கள் என ஊர்வலம் வந்தவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

Advertisement

ஆனால், அவர்களில் சிலர் குடிபோதையில் இருந்ததால் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினர்.

அதேசமயம் ஊர்வலம் நெருங்க நெருங்க பண்ணையிலிருந்த எனது கோழிகள் பயந்து ஓட ஆரம்பித்தன. ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தபோது 63 கோழிகள் இறந்துகிடந்தன.
இதுபற்றி உள்ளூர் கால்நடை மருத்துவரிடம் கலந்தாலோசித்தபோது பலத்த சத்தத்தால் கோழிகள் அதிர்ச்சியடைந்து இறந்துவிட்டதாகக் கூறினார்.

இதனால், திருமண வீட்டாரிடம் இழப்பீடு கேட்டேன். அவர் இழப்பீடு தர மறுத்துவிட்டதால் போலீசில் புகார் செய்தேன் என்று கூறியுள்ளார் அந்தக் கோழிப் பண்ணை உரிமையாளர்.

இந்தப் புகாரின் அடிப்படையில், எஃப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

திருமண இசை அதிர்வால் கோழிகள் இறந்துவிட்டதாகக் கூறப்படும் இந்த விஷயம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.