“ஜேசன் சஞ்சயை பார்க்கும்போது, தொண்ணூறுகளில் விஜய்யை பார்த்தது போலவே உள்ளது” என்று முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யை, தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி மனதாரப் பாராட்டியுள்ளார். இதற்கான காரணம் என்ன தெரியுமா?
தமிழக முதலமைச்சரும் முன்னணி நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தற்போது இயக்குநராகத் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ‘சிக்மா’ (Sigma) என்று பெயரிடப்பட்டுள்ளது. தமன் இசையமைக்கும் இந்தப் படத்தில், நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம், வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் சிறப்பு விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில், தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசுகையில், “திறமையான இளைஞர்களை ஊக்குவிப்பது எனது கடமை. சஞ்சய்யின் தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் எனக்கு பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், தளபதி விஜய் நடித்த ஒரு படத்தின் தொடக்க விழாவிலும் நான் கலந்துகொண்டிருக்கிறேன். இப்போது சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் இந்த விழாவில் கலந்துகொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சஞ்சய்யைப் பார்க்கும்போது ஆரம்பக் காலகட்டத்தில் இருந்த விஜய்யைப் பார்ப்பது போலவே இருப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
“அப்பா, தாத்தா என உங்கள் குடும்பத்தில் அனைவரும் பெரிய நடிகர்களாக இருக்கும்போது, நீங்கள் ஏன் ஹீரோவாகாமல் இயக்குநராக ஆனீர்கள்?” என்று சஞ்சய்யிடம் தான் கேட்டதாகச் சிரஞ்சீவி மேடையில் கூறினார்.
அதற்குப் பதிலளித்த சஞ்சய், தனக்கு எழுதுவதிலும், இயக்குவதிலும்தான் அதிக ஆர்வம் இருப்பதாகவும், அந்தத் திறமை தனது தாத்தாவிடமிருந்து தனக்கு வந்திருக்கலாம் என்றும் தன்னிடம் கூறியதாகச் சிரஞ்சீவி தெரிவித்தார்.
மேலும், “மற்றவர்கள் பேச்சைக் கேட்காமல், தன் மேல் நம்பிக்கை வைக்கும் ஒருவனின் கதைதான் இந்த ‘சிக்மா'” என்றும் அவர் படத்தின் கதையைப் பற்றிக் கூறினார்.
படம் முழுக்க ஆக்ஷன் மற்றும் க்ரைம் சம்பவங்கள் நிறைந்துள்ளதாகவும், படத்தின் ட்ரைலர் மிகச் சிறப்பாக இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், ஜேசன் சஞ்சய் ஒரு மாபெரும் இயக்குநராக வலம் வருவதற்கு இந்த ‘சிக்மா’ திரைப்படம் ஒரு பெரிய அடித்தளமாக அமையும் என்றும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தனது முதல் படத்திலேயே மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பாராட்டைப் பெற்றிருப்பது சஞ்சய் மீது திரைத்துறையினர் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
