Friday, December 27, 2024

பழ டீ பருகியிருக்கிறீர்களா?

நெல்லைப் பழ ரசம் பருகிப் பரவசம் அடைந்திருக்கிறோம்.
அதென்ன பழ டீ?

12 ஆண்டுகளாக ஒருவர் பழ டீ விற்றுவருகிறார்..

டீ என்றதும் பலரின் மனதில் கேரளாவோ அஸ்ஸாமோ
நினைவுக்கு வரலாம். இந்த டீயோ ஜவுளிக்குப் புகழ்பெற்ற
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரிலுள்ள தெருக்களில் பிரபலம்.
இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் தேநீர் வியாபாரி ஒருவர் முதலில் ஒரு
பாத்திரத்தில் பால் காய்ச்சுகிறார். அடுத்து பாலில் தேயிலையைப்
போடுவார் என்று எதிர்பார்க்கும் வேளையில் வாழைப்பழத்தையும்
ஆப்பிள் பழத்தையும் சப்போட்டா பழத்தையும் துண்டுதுண்டாக்கி
போடுகிறார்.

பால் நன்றாகக் கொதிக்கும்போது தேயிலையுடன் வேறுசில
பழங்களையும் சேர்க்கிறார். அவ்வளவுதான் பழ டீ தயார்.

விதம்விதமான தேநீரைப் பருகியிருந்தாலும், பழங்களில்
தயாரிக்கப்பட்ட தேநீர் சிலரின் ஆவலைத் தூண்டியுள்ளது.

சாலையோர டீக்கடைகள் பெரும்பாலான இந்தியர்களுக்குப்
பேரின்பமாக இருந்தாலும், ஒவ்வொரு மூலை முடுக்கிலும்
தங்களுக்குப் பிடித்த வித்தியாசமான டீயைப் பருகி மகிழ்கின்றனர்.
அந்த வகையில் பழ டீ பலரின் நாவில் நடனமாடுகிறது என்றால் மிகையல்ல.

Latest news