இண்டிகோ விமான நிறுவனத்தின் தொடர் விமான ரத்து அறிவிப்புகளால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே நடுவழியில் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி என்று பலருக்கும் ஒரு பெரிய குழப்பம் நிலவி வருகிறது. கவலை வேண்டாம், உங்கள் பணத்தை ஒரு பைசா கூட நஷ்டமில்லாமல், சுலபமாகத் திரும்பப் பெறுவதற்கான வழியை, இதோ நாங்கள் சொல்கிறோம்.
முதலில், இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள். அந்தப் பக்கத்தின் கீழே சென்றால், ‘சப்போர்ட்’ (Support) என்று ஒரு பகுதி இருக்கும். அதைத் தேர்வு செய்தால், ‘பிளான் பி’ (Plan B) என்ற ஒரு ஆப்ஷன் வரும். அதைத் திறந்தால், உங்கள் டிக்கெட்டின் PNR எண்ணையும், உங்கள் ஈமெயில் அல்லது கடைசிப் பெயரையும் கேட்கும். அதைச் சரியாகப் பதிவிட்டவுடன், உங்கள் பயணத்தை வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளவோ, அல்லது பயணத்தை ரத்து செய்து, முழுப் பணத்தையும் திரும்பப் பெறவோ இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும். அதில், ‘பணத்தைத் திரும்பப் பெறுதல்’ என்பதைத் தேர்வு செய்தால் போதும்.
உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டவுடன், அடுத்த ஏழு வேலை நாட்களுக்குள், உங்கள் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும். ஒருவேளை, நீங்கள் டிராவல் ஏஜென்சி மூலம் டிக்கெட் புக் செய்திருந்தால், நீங்கள் நேரடியாக அந்த ஏஜென்சியைத் தொடர்பு கொண்டு, பணத்தைத் திரும்பக் கேட்க வேண்டும். இந்த திடீர் விமான ரத்துக்களுக்குக் காரணம், விமானிகளின் ஓய்வு நேரம் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிகளை, இண்டிகோ நிறுவனம் சரியாகப் பின்பற்றாததுதான் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், பயணிகளின் தொடர் அவஸ்தையைப் பார்த்து, இண்டிகோ நிறுவனத்தின் நிர்வாகக் குழு, டிசம்பர் 7-ஆம் தேதி, ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, ஒரு ‘நெருக்கடி மேலாண்மைக் குழுவையும்’ (Crisis Management Group) அந்நிறுவனம் அமைத்துள்ளது. நிலைமையைச் சரிசெய்யத் தாங்கள் தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
