நடப்பு IPL தொடர் ஆரம்பம் முதலே விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது. கோப்பை வெல்லாத பெங்களூரு, டெல்லி அணிகள் நல்ல பார்மில் இருக்கின்றன. அதேநேரம் ஆளுக்கு 5 கோப்பைகளை வைத்திருக்கும் சென்னை, மும்பை அணிகள் பலத்த அடிவாங்கி வருகின்றன.
இந்தநிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது. மார்ச் 29ம் தேதி நடைபெற்ற மும்பை -குஜராத் இடையிலான போட்டியில், மும்பை வெற்றிகரமாக 2வது தோல்வியைத் தழுவியது.
மும்பை பேட்டிங் செய்தபோது 14வது ஓவரை தமிழக வீரர் சாய் கிஷோர் வீசினார். அப்போது களத்தில் நின்ற ஹர்திக்கிற்கும், சாய் கிஷோருக்கும் முட்டிக் கொண்டது. இதையடுத்து நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தார்.
இந்தநிலையில் போட்டியின்போது மெதுவாக பந்து வீசியதற்காக, MI கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய IPL விதியின்படி அணியின் நன்மதிப்பு புள்ளிகளும் குறைக்கப்படும்.
இது மட்டுமின்றி அடுத்து விளையாடும் போட்டியில் அணிக்கு, பீல்டிங் கட்டுப்பாடும் அமல்படுத்தப் படும். அதாவது 4 பீல்டர்களை பயன்படுத்தும் இடத்தில், 3 பேரையே பயன்படுத்திக் கொள்ள முடியும். கடந்த ஆண்டு 3 போட்டிகளில் மெதுவாக பந்து வீசியதால், சென்னைக்கு எதிரான ஓபனிங் போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் மீண்டும் மெதுவாக பந்துவீசியதால், ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் அணியும் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது.