விசா கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகியதும், இந்தியாவுக்கு புறப்பட்ட மென்பொருள் பொறியாளர்கள் பலர் விமானத்தில் இருந்து இறங்கிச் சென்ற காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 19ம் தேதி சான் பிரான்சிஸ்கோவிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட இருந்த எமிரேட்ஸ் விமானத்தில் பெரும்பான்மையாக இந்திய மென்பொருள் நிபுணர்கள் இருந்தனர். அப்போது, எச்1பி விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய பயணிகள் பலர், உடனடியாக விமானத்தில் இருந்து இறங்கி, தங்கள் பயணத்தை ரத்து செய்து வீடு திரும்பினர்.
ஒரு பயணி தனது மொபைலில் அந்த தருணங்களை பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘அமெரிக்காவிற்கு மீண்டும் திரும்ப முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் பலர் அவசரமாக வெளியேறினர்’ என குறிப்பிட்டிருந்தார். மற்றொரு காட்சியில், பயணிகள் நடைபாதையில் குழப்பத்துடன் நிற்பதும், சிலர் தங்கள் மொபைல்களில் விசா கட்டண விவரங்களை பதட்டத்துடன் தேடும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.
இந்த சூழ்நிலையை புரிந்துகொண்ட விமான கேப்டன் அறிவிப்பில், ‘அன்பான பயணிகளே, நாம் முற்றிலும் புதிய சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். பலர் பயணிக்க விரும்பவில்லை என்பதை அறிந்துள்ளோம். இந்தியாவுக்கு புறப்படும் முன், யாரும் விரும்பினால் இறங்கிச் செல்லலாம்’ என்று தெரிவித்தார். ஏற்பட்ட குழப்பத்தால், அந்த எமிரேட்ஸ் விமானம் சுமார் மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
இந்நிலையில், உலகின் சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களை ஈர்க்கும் நோக்கில், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் விசா கட்டணத்தை முழுமையாக ரத்து செய்வதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, உயர் தொழில்திறன் பெற்றோர் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான ரூ.90,000 விசா கட்டணம் நீக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
