அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் எச்1பி விசா, பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கே கிடைக்கிறது. ஆண்டுதோறும் 65 ஆயிரம் பேர், மேலும் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற 20 ஆயிரம் மாணவர்கள் என மொத்தம் 85 ஆயிரம் பேருக்கு இந்த விசா வழங்கப்படுகிறது. தற்போது சுமார் 13 லட்சம் வெளிநாட்டினர் எச்1பி விசாவை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவில் வசிக்கின்றனர். இவர்களில் 71% பேர் இந்தியர்கள்.
இந்த நிலையில், ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த எச்1பி விசா கட்டணத்தை, நேரடியாக 88 லட்சம் ரூபாயாக உயர்த்தும் ஆணையை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதுவும் புதிதாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கே பொருந்தும் என்றும், ஏற்கெனவே விசா பெற்றவர்கள் பழைய கட்டண விகிதத்திலேயே புதுப்பிக்க முடியும் என்றும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த முடிவு, திறமையான நிபுணர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை குறைக்கும் அபாயம் கொண்டதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் கூட இதனால் அதிருப்தி தெரிவித்துள்ளன. காரணம் – தொழில்நுட்ப துறைக்கு தேவையான திறமைகள் குறைவாகி, அமெரிக்காவின் வேலைவாய்ப்பு சூழல் பாதிக்கப்படலாம்.
மாறாக, இந்தியாவுக்கு இது ஒரு வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. திறமையான மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் தாய்நாட்டிலேயே இருந்து பணியாற்றும் நிலை உருவாகும். ஸ்டார்ட்-அப்கள் மற்றும் ஆராய்ச்சி துறைகள் வலுவடையும். உலகளவில் இந்தியா திறன் மையமாக மாறும் வாய்ப்பு அதிகம்.
இதனால், அமெரிக்காவின் இழப்பு – இந்தியாவின் லாபமாக மாறக்கூடும் என்றே வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
