பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில் 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.
இதுதொடர்பாக வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 17ஆம் தேதி பீகாரில் நடை பயணம் தொடங்கினார். 16 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை வரும் செப்டம்பர் 1ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நிறைவுபெறுகிறது.
இந்த யாத்திரையில் காங்கிரஸ் மாநில முதல்வர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தர்பங்கா முதல் முசாபர்பூர் வரை நடந்த யாத்திரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் , கனிமொழி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவில் ஓட்டு திருடப்படுவதை இன்று குழந்தைகள் கூட புரிந்துகொள்கிறார்கள். ஆறு வயது குழந்தைகள் கூட நரேந்திர மோடி ஓட்டு திருடர் என்று சொல்கின்றனர்,” என்றார். மேலும், அமித் ஷா கூறிய “பாஜக இன்னும் 40 ஆண்டுகள் ஆட்சி செய்யும்” எனும் கருத்தை சாடிய ராகுல், “அவருக்கு எவ்வாறு இது உறுதி? ஓட்டு திருட்டின் மூலமாகவா 40 வருடங்கள் ஆட்சியில் இருப்பார் என்று குறிப்பிட்டார்.
பாஜக, 2014க்கு முன்னரே குஜராத்தில் வாக்கு மோசடியை ஆரம்பித்து, அதை தேசிய அளவிற்கு கொண்டு வந்தது. ‘குஜராத் மாடல்’ என்பது பொருளாதார மாடல் அல்ல, வாக்கு திருட்டு மாடல் என்று அவர் விமர்சித்தார். மத்தியப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடைபெறும் தேர்தலிலும் பாஜக வாக்குகளை திருடுவதாகக் குற்றம்சாட்டினார்.
பீகாரில் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏன் நீக்கப்பட்டனர் என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்திய ராகுல், “மோடியின் வாக்கு திருட்டுக்கு தேர்தல் ஆணையமே ஒத்துழைக்கிறது. அதனால்தான் தேர்தல் ஆணைய அதிகாரிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்துள்ளனர்” என கடுமையாக விமர்சித்தார்.
அதே நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் வாக்கு மோசடியை வெளிக்கொணர்ந்து வருகிறார். அவரது குற்றச்சாட்டுகளுக்குத் தேர்தல் ஆணையம் இதுவரை பதிலளிக்க முடியாமல் தவிக்கிறது. ராகுலின் வார்த்தைகளிலும் பார்வையிலும் பயம் இல்லாத துணிச்சல் இருக்கிறது. இந்தியாவின் நீதிக்காக ஒரு வழக்கறிஞராகவே அவர் போராடி வருகிறார்,” என பாராட்டினார்.