மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணங்களில் மாற்றம் செய்துள்ளது. Ministry of Road Transport and Highways 2008ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (கட்டண நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகளில் திருத்தம் செய்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 15 முதல் நாடு முழுவதும் புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
புதிய திருத்த விதிகளின்படி, ஒரு தேசிய விரைவுச் சாலை தொடக்கம் முதல் முடிவு வரை முழுமையாக திறக்கப்படாதிருந்தால், அதில் பயன்பாட்டில் உள்ள (முடிக்கப்பட்ட) தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், அந்தக் கட்டணம் சாதாரண தேசிய நெடுஞ்சாலைகளுக்கான குறைந்த விகிதத்தில் நிர்ணயிக்கப்படும்.
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய விரைவுச் சாலையின் ஒரு பகுதி மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் சூழலில், பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தை வழங்கும் நோக்கில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தேசிய விரைவுச் சாலைகள் கட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறை கொண்டவை; அவை வேகமான மற்றும் வசதியான பயணத்தை வழங்குவதால், சாதாரண தேசிய நெடுஞ்சாலைகளை விட 25 சதவீதம் கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. விரைவுச் சாலை முழுமையாக திறக்கப்படாத நிலையிலும், செயல்பாட்டில் உள்ள பகுதிக்கு இந்த கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டது.
ஆனால், புதிய விதிமுறையின் கீழ், விரைவுச் சாலை முழுமையாக செயல்பாட்டில் இல்லாதபட்சத்தில், அதன் முடிக்கப்பட்ட தூரத்திற்கான சுங்கக் கட்டணம் 2008ஆம் ஆண்டின் விதிகளின் படி சாதாரண தேசிய நெடுஞ்சாலைகளுக்கான குறைந்த கட்டணமாகவே வசூலிக்கப்படும்.
இந்த மாற்றம் மூலம், விரைவுச் சாலைகளுக்கு இணையாக உள்ள பழைய தேசிய நெடுஞ்சாலைப் பாதைகளில் நிலவும் வாகன நெரிசலைக் குறைப்பதும், திறக்கப்பட்ட விரைவுச் சாலைப் பகுதிகள் வழியாக பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பதும், வாகன நெரிசலால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதும் முக்கிய நோக்கங்களாகக் கூறப்பட்டுள்ளன.
